இன்று கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள்
பத்திரிகை மூலமிப் பார்வென்று! தெங்கிளநீர்
ஒத்த கதைமூலம் ஓங்கிய - முத்தமிழர்
சொல்கிடங் காகச் சொலித்தவெம் ஆசிரியர்
கல்கி புகழைக் கருது!
பொன்னியின் செல்வன் என்கிற காவியம்
பூமியில் தோன்றியதும்
பொற்புடை வார இதழாய்க் கல்கி
புகழுற நின்றதுவும்
உன்னதத் தமிழின் உயரமும் சிறப்பும்
உளங்கள் நிறைத்ததுவும்
உத்தம சீலர் கிருட்டின மூர்த்தி
உழைத்ததில் தானன்றோ - எனவே
வாழிய வாழிய அன்னவர் புகழென
வாழ்த்தொலி பாடோமோ
நடுநிலைக் கொள்கை நாட்டினில் தோன்ற
நல்லிதழ் செய்தததுவும்
நலனெனும் மந்திரம் நாளும் உரைத்தே
நன்னிலை தந்ததுவும்
படிப்பவர் நெஞ்சில் பதிந்திடும் வண்ணம்
பதங்கள் பிறந்ததுவும்
பாரத நேசர் கிருட்டிண மூர்த்தி
படைத்ததில் தானன்றோ! - எனவே
வாழிய வாழிய அன்னவர் புகழென
வாழ்த்தொலி பாடோமோ
சிறுகதை நல்ல விமர்சனம் எல்லாம்
சிலிர்க்கத் தந்ததுவும்
சிறுவரும் பெரியோர் அனைவரும் பயிலும்
சிந்தனை தூவியதும்
திறமைக ளாலே திக்கினை ஆண்டார்
சேர்க்கை உயர்ந்ததுவும்
தீந்தமிழ் நெஞ்சர் கிருட்டிண மூர்த்தி
திகழ்ந்தததில் தானன்றோ - எனவே
வாழிய வாழிய அன்னவர் புகழென
வாழ்த்தொலி பாடோமோ! - தமிழர்
வளைகரம் கொட்டி மனமிகத் துள்ளி
வட்டமிட் டாடோமோ!
-விவேக்பாரதி
09.09.2019
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
ReplyDelete