இரவில் ஒரு சலனம்

 Starry night - Vincent Van gogh

மனது கேளாமல் துடிக்கும் விழுப்புண்ணில்
    மருந்தை யார்பெய்வது? - இதில்
எனக்கு தான்துன்பம் எதற்குத் தீப்பந்தம்?
    எவரிதைச் செய்வது? - ஒரு
கணக்கு தெரியாமல் வழக்கு புரியாமல்
    காயம் குதிபோடுது - அதை
அணைக்க வழியில்லை அடக்கத் துணிவில்லை
    அழுகை வழியானது!


அடங்கி வாழாமல் அதிர்ந்து வீழ்கின்ற
    அசட்டுத் துணிவுள்ளது - அது
தொடங்கும் சிலவாட்டம் தொடரும் முன்னாலே
    தோற்று பின்வாங்குது - மனம்
மடங்கி வாழ்கின்ற வழியில் சிறுகாற்று
    மனதை விடுவித்தது - அது
தடங்கள் தெரியாமல் திசைகள் அறியாமல்
    தரையில் விளையாடுது!

அமர ஒருபுள்ளி நகர ஒருகோடு
    அறிவில் நான்வைக்கிறேன் - விதி
அமைத்த வழிதன்னை அழித்துத் தூளாக்கி
    அதிர்ந்து சிரிக்கின்றது - இது
சமயம் எனவுள்ளம் பழைய துணிபோர்த்தி
    சலனம் செய்கின்றது - ஒரு
குமுறல் அதனாலே பணிகள் முன்வந்து
    குணிந்து விழவைக்குது!

உளத்தில் தாளிட்ட உயர்ந்த பொழுதிங்கு
    உலுக்க அழுகின்றது - வெளித்
தளத்தில் மனம்சென்று மயக்கம் பலகண்டு
    சரிந்து வலிகண்டது - அதன்
விளக்கம் ஏனென்று விளக்கும் மதிசொல்லை
    மனது மறுக்கின்றது - இருள்
துளக்க முடியாத துன்ப இரவென்னைத்
    துரத்தும் வகையானது!

அது
துரத்த நானோடி தொடர்ந்து கவிபாடி
    துயர நிலைதாங்குவேன் - என்
வரத்தை நிஜமாக்கி வலுவைப் பெரிதாக்கி
    மனத்தை நான்வெல்லுவேன் - என்
கரத்தில் கவியுண்டு கருத்தில் இசையுண்டு
    கதியில் நான்செல்லுவேன் - மனம்
விரித்த வலைதாழ்ந்து இருந்த தளைநீங்க
    வியந்து கவிசொல்லுவேன்!!

-விவேக்பாரதி
03.05.2019

Comments

Popular Posts