தமிழ்வளர்த்த சான்றோர் - 5


இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் விழாக்கோலம் பூண்டது தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தொடர் நிகழ்ச்சியின் மேடை. தமிழ்நாடு கண்ட தமிழ்ச் சான்றோர்களது வாழ்வையும் வாக்கையும் படம்பிடித்துக் காட்டும்வண்ணம் கடந்த ஐந்து வருடங்களாக மாதம்தோறும் நடந்துவருகின்ற நிகழ்ச்சி, தமிழ் வளர்த்த சான்றோர். 

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரான முனைவர் வ.வே.சு வும், மூத்த பத்திரிகையாளர் சுப்புவும் கிருஷ்ணகான சபாவுடன் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் 59 ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று முனைவர் வ.வே.சு பேசிய தலைப்பு, “பல்துறை வித்தகர், இதழியல் அறிஞர் தமிழ்வாணன்”. அவருடன் அருகிருந்து மேடையைப் பகிர்ந்து கொண்டது தமிழ்வாணனின் மகன் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன். 

நேரம் தவறாமல் சரியாக ஆறரை மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் குமுதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், இல.கணேசன், வி.எஸ்.வி ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்வாணனின் குடும்பத்தினர், கல்கண்டு பத்திரிகையின் பழைய வாசகர்கள், இலக்கிய உலகத்து ஆளுமைகள் என்று அரங்கம் முழுக்கவும் நிறைந்திருந்தது. 

தம்முடைய நல்ல தமிழ் நடையாலும் எழுத்தாலும் மக்கள் மனத்தில் நீங்காத இடம்பெற்றவர் தமிழ்வாணன். பெரும் பத்திரிகையாளரும் மணிமேகலை பிரசுரத்தைத் தொடக்கி வைத்தவருமான தமிழ்வாணனைப் பற்றி முனைவர் வ.வே.சு வும் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனும் திறம்பட பேசி, பார்வையாளர்களை கட்டிப் போட்டனர். 

தமிழ்வாணனின் எழுத்துகளில் ஆழ்ந்து ஊறிய வ.வே.சு, அவருடைய தரமான கேள்வி பதில்கள் பகுதியிலிருந்து நிறைய கேள்வி பதில்களை ஆங்காங்கே தூவிக்கொண்டிருந்தார்.




தம் தந்தையுடைய அனுபவத்தையும் வாழ்க்கையையும் லேனா தமிழ்வாணன் தமக்கே உரிய பாணியில் விளக்கினார். கல்கண்டு பத்திரிகையின் பெயர்க் காரணம். தமிழ்வாணன் என்ற பெயர்வரக் காரணம் என்று மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் நடுநடுவே பரிமாறப்பட்டன. சக பேச்சாளர் என்பதையும் தாண்டி முனைவர் வ.வே.சு, சில கணங்களில் பத்திரிகையாளன் போல தமிழ்வாணன் குறித்து லேனா தமிழ்வாணனிடம் கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைத்தது மிகவும் அபாரமாய் அமைந்திருந்தது.  

தமிழ்வாணனின் திரைப்பட அனுபவங்களைப் பற்றியும் இருவரும் பேசி பகிர்ந்து கொண்டனர். தமிழ்வாணனுடைய தமிழ்ப்பற்று மிகவும் சிறப்பாக போற்றப்பட்டது. கதைகளில் எல்லாம் தம்முடைய பாத்திரங்களுக்கு நல்ல தமிழில் பெயர் வைத்தமையும், நல்ல தமிழ்ச் சொற்களைப் பத்திரிகைகளில் பயன்படுத்தியதையும் சிறப்பாக நினைவு கூர்ந்து பாராட்டினர்.   

நிறைவில், அடுத்த கூட்டத்துக்கான அறிவிப்பும், தமிழ்வாணனின் குடும்பத்தினரின் அறிமுகமும் முடிந்து நிகழ்வு நிறைவுற்றது.

Comments

Popular Posts