வானுக்கு மேல்



வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு
வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை
நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை
நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை!

காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்
காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்
மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்
மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்!

அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்
ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்
சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்
சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்!

யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்
யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்
பாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்
பார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்

வானத்தை நமக்காக தேவன் படைத்தான்
வானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்
ஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்
நம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்!

மேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்
மெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்
காலுண்டு காலில்லை நாமே பறப்போம்
ககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்!

இந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்!!

-விவேக்பாரதி 
11.04.2019

Comments

Popular Posts