அன்னத்தின் இறகு

 Image may contain: sky, nature and outdoor

யாருடனும் பேசாத இரவொன்றில்,
எனக்கு மட்டும் கேட்டது
நிலாச் சத்தம்!
படுக்கை அன்னப் பறவையானது!
மேகங்கள் கால் பட்டு கலைந்தன!
இருட்டிய வெளி எங்கும்
ஒரே ஒளிவழி
தனக்குள் என் வாகனத்தை
இழுத்துக் கொண்டது! 


ஆளரவம் இல்லாத வானம்!
அச்சம் துளி கூட இல்லை!
வழி எங்கும் சாலை விளக்கு,
அட! நட்சத்திரங்கள்!
வானத்திலும் வாசம் உண்டு
நீங்காத பூ வாசம்!
இன்னதென்று விளம்ப இயலாத்
தென்றலின் வாசக் கூட்டு!

நிலவுச் சத்தம் காதுக்குள்
இசை மூட்டிக் கொண்டே இருந்தது!
சலங்கையா?
ஜதியா?
சந்தமா?
மெட்டா?
அறியாமல் அந்த இசைக்கு
ஆனந்தத் தமிழ் வார்த்தைகள்
அடி நெஞ்சில் குதிபோட்டன!

நெருங்கி நெருங்கி வரக்
கவிதைத் தொகுப்புக்கு மேலே
கவிதைகள் குவிந்தன!
நெடுந்தூரப் பயணம்
தனிமையை இனிமை செய்ய
நிலவின் அருகில்
ஒரே நிசப்தம்!

திடுக்கிட்டுத்
திரும்பிப் படுக்கையில்
தாத்தாவின் குறட்டை!
கைகளில் மேகச் சலனம்!
அன்னத்தின் இறகு!!

-விவேக்பாரதி
06.01.2019

Comments

Popular Posts