கனவும் கனவு சார்ந்த நினைவும்

 
இதுவும் ஒரு குறும்படப் படப்பின்போது நிகழ்ந்த அனுபவம் தான். எழுதச் சொன்ன நண்பன் Karthik Mano வுக்கு நன்றி.

புயல் வரும் என்று அறிவித்த சமயம். அன்று மாலை தொடங்கி முழு இரவும் படப்பிடிப்பு நடத்துவதாய் எங்கள் திட்டம். சுமார் 7 மணி அளவில் தொடங்கினோம். ராயப்பேட்டை பகுதியில் குடியிருப்புகளிடம் அனுமதி கேட்டுத் தொடங்குவதற்கு அவ்வளவு நேரம் ஆனது. சரியாக பாதிக் காட்சி நடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா விருந்தாளி வானிலிருந்து வந்தது. சரியான மழை! கொஞ்சம் கூட இடைவேளை தாராத மழை! ஒரு முதியவர் தன் வீட்டு கார் பார்க்கில் நின்றுகொள்ள இடம் தந்தார். இரவு நேரத்தில் அவர் எங்களுக்குக் கர்ண மகாராஜாவைப் போல காட்சி அளித்தார். ஆனால் எல்லாரும் அங்கே நிற்க முடியவில்லை. சிலர் நாங்கள் வந்திருந்த காரில் படுத்துக் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தயாரானோம்.

குளிர், மழை, படப்பிடிப்பை நடத்த முடியாத கவலை என்று எதுவும் எங்களைப் பீடிக்கவில்லை. பொழுதைச் சிரித்தபடி மிகவும் துள்ளலோடு ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி தான் கழித்துக் கொண்டிருந்தோம். சரி! நாங்கள் தூங்குகிறோம் என்று இரண்டு நண்பர்களுடன் நானும் காருக்குள் ஏறிக் கொண்டேன். இருந்த களைப்புக்கெல்லாம் சற்று நேரத்தில் நான் தூங்கிவிட்டேன்! கேமரா தொடங்கி எல்லா படப்பிடிப்பு சாதனங்களும் காருக்குள் எங்கள் மேலிலும் மடியிலுமாய். அதனைக் கட்டிப் பிடித்துக் கொண்டும் ஒருவர் மீது ஒருவர் தலை, கை, கால் போற்றவை முறையே முறைதவறி கிடத்தியபடியும் மரக்கிளை மந்திகளாய்த் தூக்கம். வெளியே எங்கள் கூட்டத்து மீதி ஆட்கள் கதையடித்தபடி குளிரைக் கொசுக்கடியை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.

மணி சுமார் 3.00 இருக்கும், நான் முன் இருக்கையில் படுத்திருந்தேன். ஓட்டுநர் இருக்கையில் ஒருவனும் பின்னிருக்கையில் ஒருவனுமாய் நண்பர்கள். அவர்கள் நான் தூங்கிய பின்னும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருமுறை "சும்மா படுங்கடா" என்று சத்தம்போட்ட ஞாபகம் எனக்கு. அந்த அர்த்த ஜாம 3.00 மணிக்கு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன், என்னைத் தாண்டி எகிறி குதித்து ஓ ஓ என்று அலறியபடியே காரின் பின் கதவைத் திறந்து வெளியேறினான். உள்ளும் வெளியிலும் எங்களுக்கு ஒரே உதறல்.

ஆனால் அவன் நிஜமாகவே உதறிக்கொண்டு ஓ ஓ என்று உச்ச பயத்தில் கத்திக்கொண்டே சாலை நெடுக விழுந்து வாரி ஓடுகிறான். பார்த்த எங்கள் அனைவரது கண்களிலும் விலகாத திகில். பாம்பு பாம்பு என்று அலறியபடியே அவன் ஓடினான். சற்று தொலைவை எட்டியதும் விழுந்து எழுந்து சமாதானமாகி நின்றான். அதற்குள் முன்னே சில நண்பர்கள் சென்று அவனைத் தேற்றிக் கொண்டு வந்தனர். பின்னிருக்கையில் படுத்திருந்தவன் இதனைக் கண்டு குளிர் நடுக்கத்துடன் சேர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தான். எனக்கோ என்ன செய்வதென்று புரியாத திகில். சற்று சுதாரித்து வண்டிக்குள் பாம்பா என்று விளக்குப்போட்டு தேட ஆரம்பித்தோம். மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்ததால் விழுந்திருக்கலாம் என்ற யூகம். உள்ளே விளக்கடித்துத் தேடும்போது இன்னொரு நண்பனின் செந்நிற மொபைல் சார்ஜர் தான் கிடந்தது.

"இல்லடா! தூங்குறதுக்கு முன்னாடி பாம்ப பத்தி தான் ஜாலியா பேசிட்டு இருந்தோம்! அத அப்டியே நெனச்சிட்டு தூங்கிருப்பான்" என்று பின்னிருக்கையில் இருந்த நண்பன் நடுக்கம் நின்ற தெளிவில் சொன்னான். "அடப் போங்கடா! இதுக்கு மேல எங்க படமெடுக்க! வாங்க போகலாம்" என்று எல்லோரையும் பத்திரமாக வீட்டுக்குக் கிளப்ப ஆயத்தமானோம். சட்டையைக் கழற்றி உதறியபடியே அவன் கத்திக்கொண்டு ஓடியதில் அருகிருந்த சில வீட்டு ஆட்கள் விழித்துக் கொண்டார்கள். அவர்களையும் சமாதானப் படுத்தினோம்.

இனி உறங்குவதற்கு முன்னம் முடிந்தவரை சிந்தனையை ஒன்றுமில்லா வெள்ளை மனநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் கற்றுக் கொண்டோம். அதுவும் செல்பேசி மோகத்தால் இரவுகளைத் தொலைக்கும் என் போன்ற இளைஞர்களுக்கு இது கட்டாயம் தேவை! குறைந்தது 6 மணி நேர நிம்மதியான உறக்கம். இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்ததும், பாம்புகளைப் பற்றிய பேச்சும், பீடிக்கவில்லை என்று நினைத்த பயமும் கவலையும் அவனை இப்படிச் செய்திருக்கிறது என்று அவனைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

கீழ்விழுந்து எழுந்து ஓடியதில் கையில் மட்டும் இலேசான சிராய்ப்புடன் அவன் வீடு சென்றான். இன்னும் மணிக்கட்டில் அது ஆறாத பாம்புக் கடித் தளும்பு போல தெரிகிறது.

Comments

Popular Posts