பொங்கல் பாட்டு



தரமேல வெண்ணிலவா தளைச்சதடி பொங்கல்
கரும்பப்போல இனிமையா கெடச்சது தைத் திங்கள்
கொலவ போட்டு ஒரக்கக் கூவடி!
பொங்கலோ பொங்கலுன்னு வாழ்த்துப் பாடடி! 


பொங்கலோ பொங்கல்...

ஏர்பிடிச்ச உழவனையும் ஒசத்திப் பாடடி! இங்க
எல்லாருக்கும் எல்லாமுன்னு சேர்த்துப் பாரடி
வேர்புடிச்ச நெல்லப்போல வளஞ்சு ஆடடி!
வெள்ளாமை செல்வமுன்னு மதிச்சுப் பாடடி!

பசு,கன்னு காளையத்தான் கும்புட வேணும்! நெல்லு
பயிரே நம்மசாமி சொல்லிட வேணும்!
பட்டாட கட்டி வந்து சிரிச்சிக்க வேணும்! நம்ம
பாட்டக் கேட்டு வானங் கையத் தட்டிட வேணும்!

(தரமேல வெண்ணிலவா....)

நெஞ்சுல நெருப்புவெச்சு சுண்ட காய்ச்சனும்! அங்க
நெய்யுருக உண்மவரும் நெனைச்சுப் பார்க்கணும்!
கொஞ்சூண்டு ஏலவாசம் சேர்த்துக்க வேணும்! அது
கொஞ்சக் கொஞ்ச பொங்கலிட்டு ரசிச்சிக்க வேணும்!

தமிழத் தமிழங்கிட்டப் பேசிப் பாரடி! நம்ம
தாய்மொழியே அடையாளம் தெரிஞ்சி பேசடி!
பாலு வெல்லமெல்லாம் மனசு போலடி! அது
பளபளன்னு பொங்குறதும் இளம யாலடி!!

(தரமேல வெண்ணிலவா....)

-விவேக்பாரதி
15.01.2019

Comments

Popular Posts