அன்புள்ள இல்லாளே


~தேர்தல் சமயத்தில் கவிஞர் சந்தோஷ்குமார் எழுதிய புதுக்கவிதை ஒன்றின் வெண்பா வடிவம்~

அன்புள்ள இல்லாளே! நீயோ நலமிங்கே!
என்னுயிர் அங்கு நலமாசொல் ? - உன்நினைவு
மென்றுமென்று நன்றாய்க் கொழுத்துப்போய் என்னையும்
கொன்றிட வீழ்ந்தேனே பார்!

அங்கு நிலவரம் எப்படிசொல்? என்நினைவுத்
தங்கரதம் உன்னையும் மெல்லத்தான் - அங்கத்தை
மோகப்பதம் செய்கிறதா சொல்லிடுவாய்! என்னுயிர்
போகும் படிசிரிக்கும் மாது !

என்னதான் செய்கிறான் எட்டாவது மாதத்தில்
உன்வயிற்றில் என்காதல் சாட்சியும் - உன்னோடு
நானில்லாக் கோபத்தில் உன்னை உதைக்கிறானா ?
ஊனில்லா நல்லுயிர் தான்  !

அவனங்கே நீசொல் வதைகேட் கிறானா ?
அவன்சொல் வதைநீ உணர்ந்தாயா - தேவதையே
உன்னிதயத் தோடு அவனிதயம் தாந்துடிக்கும்
பொன்சத்தம் கேட்குதுபார் இங்கு !

என்னுயிரே தங்கமே நாளைநம் நாட்டிற்கு
நன்னாள் வளைகாப்பு நாளாம் - நன்மையை
வாக்குச்சீர் மூலம்தான் செய்ய மறவாதே        
காக்கும் நமதுநலம் அஃது !

நம்மக்கள் நாளையும் இந்நாட்டு மன்னர்கள்
நிம்மதியாய் வாழ்ந்திட வாக்கென்னும் - நம்பிக்கை
கொண்டுஜன நாயகம் ஈனும்ஆட் சித்துணை
தொண்டாற்ற வேணும் தொடர்ந்து !

சின்னத்தைப் பார்க்காதே சின்னத்தின் வேட்பாளன்
என்னசெய்வான் என்பதைப் பாரடி - பொன்நாட்டில்
நோய்ஊழல் தான்குறைய பிள்ளையும் நீயுமாய்
போய்வாக் களியுங்கள் சென்று !

என்னருமை குட்டிம்மா! பிள்ளைக்கு ஏதுமின்றி
உன்பதம் மெல்ல எடுத்துவைத்து - உன்னுரிமை
நாட்டிட வாக்களிக்கும் சாவடிக்குச் சென்றிடு
நாட்டின் உயிர்உன்கை களில்!

மீண்டும் அடுத்த மடல்தனில் காதலும்
தூண்டும் விதமாய் வருகிறேன் - வேண்டுமடி
கண்ணே கவனம்நம் பிள்ளைமேல் அத்துடன்
கண்போலே காத்திடுநாட் டை !

இப்படிக்கு ஆயிரம் காதங்கள் தாண்டியும்
செப்பிட ஏலாத ஆசையுடன் - ஒப்பிலா
முத்தமொரு கோடியுடன் முன்னூறு நாடுதாண்டிச்  
சித்திரமே உன்கணவன் நான் !   

-விவேக்பாரதி
20.04.2014

Comments

Popular Posts