வருக வருக காவேரி அன்னை


தமிழ்நாட்டிற்குள் பெருமையாய்ப், பிரவாகமாய் ஓடி வரும் காவிரியைப் பார்த்தால் மலைப்பு உண்டாகிறது. அதே தண்ணீர்தான் பக்கத்து மாநிலத்தைத் துக்கத்தில் ஆழ்த்தியது என்பதை நினைத்தால் சோகம் உண்டாகிறது. இரண்டுக்கும் இடையில், திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பொங்கி நுரைத்தோடிய காவிரியின் பருந்துப் பார்வைக் காட்சியை ஊடகங்களில் கண்டதும் ஊற்றெடுத்த சிறுபாட்டு! 

வருக வருக காவேரி அன்னையே
வளங்கள் அனைத்தும் பெருக! 
தருக தருகவுன் அன்பின் கைகளே 
தமிழகம் தலை நிமிர! 

பொங்கி நுரைத்துவரும் பூம்பாவை 
புஞ்சை நஞ்சைகளை அணைத்திடுக!
இங்கும் அங்குமென எங்கெங்கும் 
இனிய நீர்வளமே பெருக்கிடுக! 
அங்கு நமதினிய கேரளத்தை, 
ஆட்டுவிக்கும் செயல் நிறுத்திடுக! 
தங்கிடாமல் எங்கும் ஓடோடி 
தமிழர் வீடுகளை மகிழ்த்திடுக!

உனது வருகையினைப் பார்த்தவுடன் 
உவகை பொங்கிடுதே உள்ளத்திலே 
உனது பெருங்குரலைக் கேட்டவுடன் 
உடல் சிலிர்த்திடுதே ஆசையிலே 
உனது வருகையால் மாநிலமே 
உயிர் அடைந்ததடி காவிரியே 
உனது கடமையென உள்நுழைந்து 
உண்மை என்னும்புதுப் பூவிரியே! 

அணை நிறுத்தியுனைக் காப்பாற்றி, 
அதைப் பொறுத்துவயல் சீராட்டி,
மனை வளர்த்துமுனைப் பாராட்டி,
மனத்தில் எப்பொழுதும் ஆராட்டி,
தினமும் வாழ்வோமெம் காவிரியே 
திசையெல்லாமுன்றன் ஆவளியே! 
மனிதர் வாழ்ந்திடவே மலைபிறந்தாய் 
மங்கை யானநதி வாழியவே!! 

-விவேக்பாரதி
02.07.2024
11.05 AM

Comments

Popular Posts