யாத்திரையின் பூத்திரையில்


வைகறையில் தோன்றியது இந்த வெள்ளை கனவு... பாழடைந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்திருந்த சாதுக்களின் குழு, ஏதோ பாடிக் கொண்டிருக்க, அவ்வழியாகச் சென்ற நான் அவர்களோடு இணைந்து,  என்னை அறியாமல் அந்த முழு பாடலையும் பாடி முடித்தேன். அதைக் கண்டு பரவசம் அடைந்த அங்கிருந்த முதியவர் ஒருவர், கண்ணில் நீர்மல்க எழுந்து வந்து என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். என் நெற்றியை திருநீற்றால் அலங்கரித்தார். விழித்தெழுந்து பார்த்தால் குறட்டைக்கு மத்தியில் ரயிலில் இருந்தேன். அப்படி விடிந்த காலையில் உச்சரித்த முதல் வார்த்தையே இந்தக் கவிதையானது... 

உனக்கு மட்டும் தெரிந்த பாடல் 
எனக்குத் தெரிந்தது எப்படியோ 
உனக்கு முன்னர் நானதைப்பாடும் 
உணர்ச்சி வந்தது எப்படியோ 
எனைநீ உடனே அணைத்துக் கொண்டு 
எழுச்சி தந்தாய் எப்படியோ 
எனக்காகத்தான் காத்திருந்தது போல் 
மகிழ்ச்சி கொண்டாய் எப்படியோ

கனவில் வந்த சத்குருவே
கண்முன்னால் வர மாட்டாயா 
மனதில் உள்ள மாயக் கேள்விகள் 
மர்மம் அவிழ்க்க மாட்டாயா?

வழிப்போக்கன் போல் நீயெனைக் கண்டாய் 
வழிபோல் உன்னை நான்கண்டேன் 
வணக்கம் கூடச் சொல்லிடவில்லை 
வாழ்த்துப் பாடல் நான்படித்தேன்
மொழி சொல்லாமல் விழியால் அழைத்தாய் 
மௌனத்தோடு நெருங்கி வந்தேன் 
முடிமேல் கைகள் வைத்துச் சிலிர்த்தாய் 
முக்திக்(கு) அருகில் நின்றிருந்தேன்! 

என் தத்துவங்கள் எனக்கே புதிது 
என்னுள் வந்த கதை எதுவோ 
என் கவிதைகள் எனக்கே புதிர்கள் 
எழுதச் செய்யும் கையெதுவோ 
என் ஓட்டங்கள் எனக்கே அலைச்சல் 
என்றைக்கு ஆகும் யாத்திரையாய்? 
எல்லாம் கேட்க நினைத்தும் மறந்தேன் 
ஏனோ விழிகள் பூத்திரையாய்! 

கனவைக் கலைத்து கண் விழித்தாலும் 
கையில் இன்னும் உன்ஈரம் 
கனலாய் நெற்றியில் கொதிக்குதப்பா 
கையால் பூசிய நீர்கோலம் 
உன்னையே இனிமேல் தேடித் தெரியும் 
உண்மையிலே என் வருங்காலம் 
உறுதியாக நீ அறிந்து நகைப்பாய்
ஊமை பிள்ளைக்(கு) அது போதும்

-விவேக்பாரதி
12.07.2024
காலை 05.35

(என் கண்முன் தீட்சண்யமாக விரிந்த அவரது முகத்தை எவ்வளவு முயன்றும் செயற்கை நுண்ணறிவால் வரைய முடியவில்லை.)

Comments

Popular Posts