விடையனுப்பும் ரயில் முத்தம்



பக்கம் யாரும் பார்க்காமல் - நாம்
பகிர்ந்து கொண்ட ரயில்முத்தம்
வெட்கம் கலந்து பரவசத்தில் - நன்கு
வேக வைத்த மென்முத்தம்! 

ஆரஞ்சுச் சுளை உன்னிதழை - நான் 
ஆராய்ந்திருந்த பொழுதினிலே
நீரைச் சுரந்த உன்முத்தம் - குளிர்
நிலவில் வடித்த பால்முத்தம்! 

பதறிக் கிடந்த உன்தவிப்பு - அது
பால்போல் தகித்த உன்கொதிப்பு 
எதையும் கண்டு கொள்ளாமல் - நான் 
எழுதி முடித்த இசைக்குறிப்பு

பிரியப் போகும் தொலைவுகளை - அதில்
பிறக்கப் போகும் கீறல்களை 
சரிசெய்கின்ற மருத்துவமாம் - இதழ்
தழுவிக் கண்ட தத்துவமாம்

முத்தித்திருந்த கணமெல்லாம் - நான் 
முக்தி நோக்கிப் பயணித்தேன்
ஒத்திக் கிடந்த இதழ்வழியே - உன் 
இதயத்துள்ளும் பயணித்தேன்

முன்னர் விழைந்த பயணத்தை - நான் 
முடிப்பேனா எனத் தெரியவில்லை
உன்னுள் இறங்கி நான்நின்றால் - அதை
உறுதிப் படுத்த முத்தமிடு! 

மின்னல் போன்றே இருந்தாலும் - வெறும்
மேலாப்பில் இதழ் பதிந்தாலும்
என்னை நீயாய் முத்தமிடு - பின்
ஏக்கத்தோடு விட்டுவிடு!!

-விவேக்பாரதி 
27.06.2024
காலை 03.50

Comments

Popular Posts