மீட்பிலாப் பெருவாழ்வு


நீ மீள வேண்டாம்
ஆம் 
நீ மீளவே வேண்டாம்
 
காலத்தில் ஆற்றுச் சுழலில்
எங்கோ தொலைந்துவிட்ட நீ,
பருவத்தின் தெளிவுக் கூட்டத்தில்
மிக தூரம் நகர்ந்துவிட்ட நீ, 
உணர்ச்சிகளின் ஆழக் கிணற்றில்
மூச்சின்றி மூழ்கிவிட்ட நீ 
இனி மீளவே வேண்டாம்! 

மரணிக்கும் உடல்கள்
மறுபடி வருதல் எப்படி
திகிலுடைத்ததாகுமோ
அதை நேர் செய்யும் 
நீ மீண்ட வருகை! 

பட்டுப்போன இலையிருந்த 
காம்பின் நுனிப்பிடியில்
புதிய இலைதான் பூக்க வேண்டுமே ஒழிய 
பட்ட இலை மீண்டும் 
படர்தல் கூடாது! 

சிந்திய தண்ணீர் மீண்டும் 
சேராதைப் போல்,
துப்பிய எச்சில் 
மீண்டும் சுவைக்காததைப் போல்
உன் மீண்ட வருகையும் 
சாத்தியமும் சத்துமற்றதாகவே போகும்

ஏதோ ஆழ இருட்டுக்குள்
வீழ்ந்து கொண்டிருக்கிறாயே 
நீ மீளவே வேண்டாம்! 

ஏ சுயமே 
மீண்டு வந்து பார்க்க 
உலகம் கேட்பாயே? 
அது சுக்கலாகித் தூரமாய்த்
தொலைந்து போகையில்
நீ மீண்டென்ன பயன்? 

ஏ மனமே! 
திரும்ப வந்து பேச 
மொழி கேட்பாயே 
உன் சொற்கள் எல்லாம் பூட்டிக்கொண்டு 
மௌனக் காட்டிற்கு 
அடிமைகளாய்ப் பணி செய்கையில்
நீ திரும்பியென்ன லாபம்? 

ஏ காதலே 
உன் வருகை எதிர்நோக்கிக்
கண்கள் காத்திருக்க நினைப்பாயே, 
எலும்புக்கூட்டுக் கண்ணின் குழியில்
பூரான்கள் புகுந்தோட 
செல்லரித்து போனவர்களின் கண்கள்
உன்னையா பார்த்துக் கொண்டிருக்கும்? 

ஏ வாழ்க்கையே
மரணத்திற்கு முன் 
குட்டிக் குட்டி மரணங்களும்
பிறப்புக்கு முன் 
சின்னச் சின்ன பிறப்புகளும் 
நேர விரும்புவாயே, 
உன் கணக்கெழுதும் கடவுளே 
இங்கு தெருவில் ஏடு சுமந்து
பிச்சை எடுக்கையில்
உன் நாளுக்கென்ன 
அவன் திட்டமெழுத! 

மெல்ல மெல்ல இழுக்கும்
எந்தப் புதைகுழியின் உள்ளே 
புகுந்து கொண்டாயோ
அதையேனும் முழுதாய்க் காதலித்து
மாண்டு போ
நீ மீண்டு வர யாரும்
கேட்கவும் இல்லை! 
நீ மீண்டு வந்தால் பார்க்க 
யாரும் இருக்கப் போவதும் இல்லை!

நீ 
மீளவே 
வேண்டாம்!!

-விவேக்பாரதி
19.05.2023
காலை 03.10

Comments

Popular Posts