தேடித் தேடித் தேடுகிறேன்


அவளை நீங்கள் பார்த்தீரா?

ஆழக் கடலில் அலைவரும் என்றென்
ஆழ மனத்துள் அலைகள் கிளப்பி
வாழும் ஒவ்வொரு கணமும் என்னை
வாழ்த்த, வாட்ட, வதைக்க, நினைக்க
ஏழை என்முன் தோன்றி மறைந்து
ஏக்கம் எல்லாம் உள்ளில் விதைத்துத்
தோழமை போலும் தொல்லையன் போலும் 
தோன்ற சீன்சோன் செய்திடுவாளே!

அவளது குரலைக் கேட்டீரா? 

ஆலங்கட்டி மழையுடன் சேர்த்து
அதகளம் செய்யும் புயலதன் நடுவே 
காலம் கடந்து நேரம் மறந்து
கடைசிச் சொட்டு சொல்லுக்காக
ஓலமிட்டுக் கதறும் என்னை
ஒருநொடி நெருங்கி பலநொடி விலகி
வேலை அலைபோல் நாடகம் நடித்து
வெற்றுச் சிரிப்பை உதிர்த்திடுவாளே!

அவளது முகவரி அறிவீரா? 

ஒருமுறை பௌர்ணமி கண்டதனாலே
ஒவ்வொரு இரவும் நகரும் போதில்
தெருவிளக்குளிடம் நின்று இதுவும்
தேயும் வளரும் வெண்ணிலவா என 
திருமுகம் தேடித் திரிந்து திரிந்து
தேய்வேன் என்பதைத் தெரிந்திருந்தாலும்
மிருகத்தின் தலை நீவுதல் போல
மெலிதாய்த் தீண்டி அகலுகிறாளே

அவளது மொழியை உணர்வீரா? 

எனக்குள் கொதிக்கும் எரிமலை வெடிப்பை 
எத்தனைச் சொல்லால் எழுதி வைத்தாலும்
மனத்துள் வளரும் மலைகளை எல்லாம்
மலராய் அவள்முன் குவித்து வைத்தாலும் 
நினைக்கும் பொழுதில் மின்னல் சவுக்கடி
நெஞ்சு பிளப்பதைக் காட்டி நின்றாலும்
தனக்குள் இருக்கும் மர்மச் சுழலில்
தளராதென்னை அமுக்கிடுவாளே

அவள் யாரென்றேனும் அறிவீரா?

புல்லாங் குழலாய் பேசும் குரலும் 
புயலின் முகிலாய் இருண்ட குழலும் 
எல்லாம் என்றோ வாழ்ந்து முடித்த 
ஏகாந்தத்தின் பூரண விழியும் 
சொல்லுக்கெல்லாம் தூண்டுதல் ஆகிச்
சொல்லில் அடங்காச் சுந்தரப் பண்பும் 
நில்லாப் பொழுத மருதாணியென 
நீண்ட விரலில் பூசிடும் ஒயிலும் 

எட்டச் சென்றால் எனைவிடத் தள்ளி
ஏழை என்னை ஏங்கிட வைத்துக்
கிட்ட வந்தால் அரசனும் ஆக்கிக்
கிளர்ச்சி தந்து கவிஞனும் ஆக்கி
முட்ட முட்ட இன்ப நெருப்பில்
மூழ்கடித்து முற்றும் நனைத்தென் 
பட்டப் பகலில் இரவு படைத்துப்
பௌர்ணமியாய் அதில் ஒளிருகிறாளே! 

அவள்தான் அவள்தான் அவளைத்தான் என் 
ஆதி காளியை தான் குறிக்கின்றேன் 
அவள்தான் அவள்தான் அவளைத்தான் என்
ஆதாரம் என்று உரக்கச் சொல்கிறேன் 
அவள்தான் அவள்தான் அவளில்தான் என் 
ஆனந்தங்கள் சேர்த்து வைக்கிறேன்
அவள்தான் அவள்தான் அவளைத்தான் நான் 
அரங்கம் தோறும் தேடி நிற்கிறேன்! 

அவளைப் பார்த்தால் சொல்லுங்கள் - என் 
அழுகைக் கவிதை கேட்டதுவாய்
அவளைப் பார்த்தால் சொல்லுங்கள் - என் 
ஆசைத் தீயில் நனைந்ததுவாய் 
அவளைப் பார்த்தால் சொல்லுங்கள் - என்
ஆனந்தம் அவள் அருகினில்தான்
அவளைப் பார்த்தால் சொல்லுங்கள் - என் 
ஆதரவெல்லாம் அவள் அடிதான்!! 

-விவேக்பாரதி
06.05.2023
மாலை 4.12

Comments

Popular Posts