அரக்கவதம்


கண்ணில் பார்க்கும் காட்சியா? 
காதில் கேட்கும் வார்த்தையா 
கைகள் உணரும் உஷ்ணமா 
கருத்தில் விரியும் பிம்பமா? 
வண்ணம் சேர்க்கும் சிந்தையா? 
வற்றிப் போன உள்ளமா? 
வழியை கேட்கும் கால்களா? 
வலிமை இழந்த பதையா?

ஒன்றும் ஒன்றும் கலந்து கலந்து 
உலுக்கி எடுக்கிறதே - இதில்
எதுதான் உண்மை? எதுதான் உண்மை? 
யாரோ சொல்லுகவே! 

கைகள் பிடிக்கும் பிரியமா? 
கணத்தில் உதறும் எண்ணமா? 
காந்தம் போன்ற காதலா? 
கண் இல்லாத தெய்வமா? 
பொய்கள் சேர்க்கும் இன்பமா? 
பொல்லா நிஜத்தின் திண்ணமா? 
போகச் சொல்லும் வார்த்தையா? 
போக்குக்கான நேசமா? 

ஒன்றும் ஒன்றும் கலந்து கலந்து 
உலுக்கி எடுக்கிறதே - இதில்
எதுதான் உண்மை? எதுதான் உண்மை? 
யாரோ சொல்லுகவே!

நம்பிக்கைதான் வானமா?
நரகில் சேர்க்கும் வாணமா? 
நானும் நடிக்க வேண்டுமா?
நடிப்பை அறிதல் பாவமா? 
எம்பிக் குதிக்க முற்படும் 
ஏழை காலில் முட்களா? 
ஏற்கனவே நான் தீயவன் 
இன்னும் தீய சொற்களா? 

ஒன்றும் ஒன்றும் கலந்து கலந்து 
உலுக்கி எடுக்கிறதே - இதில்
எதுதான் உண்மை? எதுதான் உண்மை? 
யாரோ சொல்லுகவே!

வாழ்வின் பொருளை மறக்கிறேன்
வாழ விடவும் நினைக்கிலேன்
வாகில்லாத வண்டியை
வம்படிக்கே இழுக்கிறேன்
தாழ்வின் புள்ளி நெருங்குது
தகுந்த மரணம் அழைக்குது
தாவ நெஞ்சம் மறுக்குது
தத்திக் கதறி துடிக்குது 

அதைக்
குணம் செய்யாதே கொல்ல வா
கோடி முறைக்குக் குத்த வா
கொள்ளை இருளில் அடைக்க வா 
கொஞ்சம் நெருங்கி தள்ள வா
ரணம் செய்கின்ற இருத்தலின் 
ரத்தம் பீய்ச்சும் இறப்புமேல்
அரக்கனோடு வாழ்வினும்
ரசித்து வதைத்தல் நன்றலோ!! 

விவேக்பாரதி
19.05.2023
காலை 03.40

Comments

Popular Posts