மனம் வீழ்ந்த கதை


மயிலிப்படி புருவத்தை அசைத்துக் கேட்டால்
மழையெப்படி வாராமல் ஒளிந்து கொள்ளும்?
புயலிப்படி முன்கூந்தல் தவழப் பார்த்துப்
புன்னகைத்தால் கடலெப்படி அமைதி காணும்?
முயலிப்படி சிரிக்கின்ற வண்ணம் கண்டால்
மூர்க்கநரி அமைதியுடன் நிற்குமா சொல்?
மயலிப்படி உன்கண்ணில் வழிந்து நின்றால்
மனமென்ற நகர்வெள்ளம் சூழும் தானே!

சிமிட்டாமல் அழைக்கின்ற கண்கள் என்னைச்
சிறுசிறுதாய் வெட்டுதடி மின்னல் போல,
அலட்டாமல் வெளித்தோன்றும் புன் சிரிப்போ
ஆக்சிஜனைத் தடுக்குதடி என்ன செய்ய?
தமிழ்ப்பாட்டில் சந்தம்போல் புருவத்தை நீ
தானாக அசைக்கின்றாய் அசைகிறேன் நான்
எமனென்றால் விழியென்று குறளில் கண்ட
எழுத்துவழி உண்மையினை நேரில் கண்டேன்!

முன்வீழ்ந்த உன்குழலின் மேகம் பட்டு
முழுதான பாட்டுமழை என்றன் உள்ளே!
பொன்வீழ்ந்த புன்னகையின் வாசத்துக்குப்
புலனழிந்து புதுப்பிறவி எய்துகின்றேன்!
மன்னர்கள் வீழ்ந்தகதை படித்தேன் என்றன்
மனம்வீழ்ந்த கதையின்றே தெரிந்து கொண்டேன்!
பெண்வீழ்த்த வீழாதான் இறைவன் இல்லை
பெரியவிழி வாளால்நீ இன்னும் கொல்லேன்!

மறித்துப்போய் புதிதாகப் பிறந்து வந்து
மாறாத குழந்தையென மடியில் சேர்வேன்
மறதியெனும் குளத்தில்என் முதிர்ச்சி விட்டு
மல்லிகைப்பூ மொட்டைப்போல் மலர்வேன் மீண்டும்
நிறமில்லாக் காகிதமாய் உன்றன் கையில்
நெஞ்சுகொடுத்(து) அப்படியே பொம்மை ஆவேன்
விரல்தொட்டு நீயெழுத்தும் காதல் தாங்க
விரிந்திருப்பேன் வேறென்ன வேண்டும் பெண்ணே!!

விவேக்பாரதி
03.02.2023

Comments

Popular Posts