ஹைக்கூ நால்வர்


குறில் குவா? நெடில் கூவா?
எதில் முடியும் ஹைக்கூ?
என்றுகூடத் தெரியாத 
என்னைப் பாருங்கள் பாஷோ! 
உங்களைச் சந்தித்ததில் 
மகிழ்ச்சி! 

முமு* விரல் பிடித்துத் 
தேவார நால்வராய் 
ஹைக்கூ நால்வரின் தரிசனம்
ஒரு காலைக் கரிசனம்! 

அப்பரின் ஆழத்துடன் 
நடுக்கமில்லாத் தோரணையில்
தெரிகிறீர்கள் பாஷோ! 

ரென்கா*வில் இருந்து விடுவித்துக்கொண்ட 
சுதந்திர அன்னமாய்
நீங்கள் இசைத்த *ஹொக்கு 
செர்ரி நிறைந்த வானின் 
சிவப்பு நிலவாய் மின்னுகிறது!
 
நீங்கள் கொண்டாடிய 
ஆலய மணியின் 
வண்ணத்துப்பூச்சி வழிதான் 
உங்கள் ஹைக்கூ மதத்தின் 
தீட்சை எனக்குள் திறந்தது! 

உங்கள் பயணத்தின் கால்களில் 
நானும் நடந்தேன்! 
அப்படித்தான் பூஸானைக் கண்டேன்! 

அடடே! 
வந்தனம் பூஸான்...
நீங்கள் வரைந்த கொக்கின்
கால் நீரலையில்
நான் தளும்பி நின்றதை 
உங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்!

கண்முன் தெறித்த மின்னலின் 
ஒளி காட்டிய பனித்துளியாகவும்
மூங்கிலில் நானே சொட்டுகிறேன்! 

சொல்லழகுத் தோற்றத்தில் 
சுந்தரர் நீர்! 
முதுகு வளைந்து வைக்கிறேன் 
ஜப்பானிய கும்பிடு! 

நீங்கள் சொல்லோவியம் தீட்டி 
நிரப்பிய வண்ணங்களை
அள்ளி அப்பிக்கொண்டு நிற்கிறார் 
ஷிகி!

ஓ! ரத்தம் சொட்டும் குயிலே
உன் மொழிக்கு வணக்கம்! 
நிகழ்கால (உன் நிகழ்கால)
அரசியலின் புதுமை நீ!

படிக்கும்போதே புனைந்த 
சிறுவன் நீ! 
ஹைக்கூ பால் புகட்டிய 
ஞானசம்பந்தன் நீ! 

உன் தீவிரம் பற்றி 
அறிய அறியத் 
தீ விரவியது எனக்குள்! 

நீ எழுதிய யுத்த வீட்டின் 
மரவேராய் நிலைத்திருக்க 
நினைத்தே மண் தொடுகிறேன்! 

ஓ! உனக்குப் பின்னால்
யாரது அழுகையுடன்?
மணிவாசக இஸ்ஸாதானே! 
ஐயா வணக்கம்! 

உம் 
மூன்றுதுளி கடல் கண்ணீரில் 
விழுந்தவன் நான் 
நீந்தத் தெரியாமல் தவிக்கிறேன்! 

எங்கள் அறிவுப்பசி தணிக்க 
உம் வயிற்றுப் பசியையா 
விருந்தாக்குவது?
மொழியின் சுடர் காட்ட 
உங்கள் பசியையா 
கற்பூரம் ஏற்றுவீர்?

சோக இசையே இஸ்ஸா! 
மற்ற மூவரைக் காட்டிலும் 
உம்மையே மிக அருகில் உணர்கிறேன்! 
என் கண்ணீரில் நான் 
வழிமறந்து போகும்போதெல்லாம் 
உம் உற்சாகத்தீயையே வேண்டி நின்றேன்! 

நீங்கள் தேறிய 
அதே வழியில் இனி 
என்னையும் தேற்றுவீர்! 

எறும்பையும் ஈயையும் 
பாட்டுடைத் தலைவன் செய்தீர்!
என் பாடுடைத்தும் காப்பீர்!
உங்கள் எழுத்தைப் பிடிக்கும் 
சிற்றுயிர்களில் ஒன்றாய் 
வாழ்ந்து...
வாழ்ந்தே விடுகிறேன்!!

முமு - மு.முருகேஷ் | ரென்கா - ஜப்பானிய கூட்டுக் கவிதை வடிவம்

-விவேக்பாரதி
22.02.2023

Comments

  1. அருமை... பாரதி. ஹைக்கூவாய் உருகும் தங்கள் கவிமனதைக் கண்டுகொண்டதில் மகிழ்கின்றேன்... நண்பரே.

    ReplyDelete

Post a Comment

Popular Posts