இன்றைக்கு நான் புதியன்


யாரும் தேவை இல்லை 
நானே எனக்கு ராஜா ஆனேன் 
போரில்லாமல் போனால் 
அமைதி இனிக்காது! 

நானே என்னை மோதி, 
தட்டித் தட்டிச் சிற்பம் செய்தேன் 
மீண்டும் கல்லும் ஆவேன்
அனுபவம் வலிக்காது!

என்மேல் விழும் 
கற்களை எல்லாம் 
கையால் பிடித்துக் 
கீழே அடுக்கி நிற்பேன் 
நான் உயருவதை 
எந்த அடியும் தடுக்காது! 

நாளை, 
அது நிச்சயம் இல்லை 
இன்றே பிறந்து 
இன்றே மடித்து மீள்வேன்!
என் தத்துவங்கள், 
இந்த ஊருக்குப் புரியாது! 

நானொரு கண்ணாடி, 
என் முன்னால் சிரித்தால் 
நானும் சிரிப்பேன்!
காரணம் இல்லாமல் 
எனை உடைப்பார் கையைக் 
குத்திக் கிழிப்பேன்! 

நானொரு பூஞ்சாடி 
அதில் மலரும் இருக்கும், 
இலையும் இருக்கும், 
காண்பவர் பார்வைக்கு 
நான் மலராய் இலையாய்த் 
தெரிவேன்! வளர்வேன்! 

நேற்றிருந்த என்னை நான் 
நேற்றே கொன்றுவிட்டேன் 
இன்றைக்கு நான் புதியன் 
நாளையும் புதிது 
நானும் புதிது! 

மாற்றத்தின் மந்திரமே 
என் வாழ்வின் எந்திரமே 
தூற்றல்கள் மறந்துவிட்டேன் 
போற்றியும் மறந்தேன் 
வீழ்ச்சியும் மறந்தேன்!!

-விவேக்பாரதி
28-01-2023

Comments

Popular Posts