Vibe uh! நம்பு!


உள்நாட்டில் சாதிகளால் பிரிக்கும் போது
    உலகத்துச் சிறுத்தைகளால் என்ன லாபம்?
கள்ளாக்கி அதில்பல்லோர் மாயும் போது
    கணினிமய ஏவுகணை என்ன வெற்றி?
வெள்ளத்தில் போம்போது பட்டு வேட்டி
    வெளுத்தென்ன கறுத்தென்ன? தம்பி நம்மை 
உள்ளத்தால் பிரிக்கின்றார் உணர்வின் பேரால்
    ஒன்றாதல் தானின்றின் Vibe uh! நம்பு! 

நீதிகளை நிலைநாட்டும் மன்றம் எல்லாம்
    நிதியிருக்கும் கட்சிகட்கு நடுமை செய்ய,
சேதிகளை தரவந்த ஊடகங்கள்
    சேறள்ளி நறுமணம்போல் அப்பிக் காட்ட,
பாதிப்பே தெரியாமல் வாய்பிளந்து 
    பகடிகளை ரசித்தபடி நாட்கள் போக 
வீதிக்கு வந்தபகை வீடு தீண்டா 
    வகைசெய்தல் தானின்றின் Vibe uh! நம்பு! 

தவறுசரி கணக்கெல்லாம் மாறியாச்சு 
    தகைமையெனின் என்னென்றே மறந்துபோச்சு 
அவசரத்துப் பெயராலே அனைத்தும் ஆச்சு 
    அடிப்படையை மறந்தாச்சு வருங்காலத்தை
எவர்க்குமின்றி நமக்கேநாம் துய்க்கலாச்சு
    எதிர்குரல்கள் சிறைச்சாலை சுவர்க்குள் போச்சு
அவரவர்க்கு தன்நியாயம் சட்டமாச்சு 
    அடுத்தவரின் உணர்வுவெறும் அற்பமாச்சு 

ஒருபக்கம் கொள்ளைகொள்ளை பணச்சுருட்டல்
    ஒருபக்கம் குடுமிப்பிடி சண்டை கூச்சல்
ஒருபக்கம் இதையறியா இளைஞர் கூட்டம்
    ஒருபக்கம் இன்னும் தீண்டாமை ஆட்டம்
ஒருபக்கம் நிழல்மோகம் நிஜத்தில் சோகம்
    ஒருபக்கம் கனவுலகம் மாய பிம்பம் 
ஒருபக்கம் போராட்டம் அதற்குள் சூழ்ச்சி
    ஒருபக்கம் Vibe uhகளாம்! விழிப்பாய் நாடே!!

-விவேக்பாரதி
17-09-2022

Comments

Popular Posts