மறந்த மௌனம்


பேரரவம்
கொட்டிக் கிழிக்கும் 
கடலாழப் புதை மேட்டில் 
வேரற்ற செடிக்கு அருகில் 
வீழ்ந்து கிடக்கிறேன்! 

அழுத்தங்களின் வாசனை 
என் நுரையீரல் நிரப்பி 
முற்றும் தனதாக்க முயன்று
ஒவ்வொரு மூச்சும் 
இடவலம் வலம்வரும் 
ஊழிப்புயலாய்க் கேட்கிறது! 

நீருக்கடியில் இருப்பினும் 
தொண்டைக்குள் 
நீரற்ற பெருந்தாகம்!

சூழும் இருள் கணவாயில் 
சுருண்டிருக்கும் என்னிடம் 
மின்னல் மீன்களின் வெளிச்சத்தைக்
கடல் கொண்டு தந்தாலும் 
சிட்டிகை வெளிச்சம்
என் காயம் காண்பதற்குள் 
கரைந்தோடுகிறது கடலிருளில்! 

விளக்கற்ற வீடுகளில் 
கிலுக்கெனும் சிரிப்பொலிகள் 
வெளிச்சப் புள்ளிகளை
விரித்துக் காட்டுகிறதெனக் 
கவிதை படித்த நினைப்பு, 
மண்டைக்குள்
கலுக்கும் நினைவுச் சிறார்கள்! 

என்னை நானே 
பூட்டிக்கொண்டு 
சாவியை விழுங்கிச் செறித்த 
இந்தக் கடலாழத்தில் 
உன் புனை தேடுவது 
என் நங்கூரக் கர்வம் 
அறியாமல்தான்! 

ஒலி மங்கிப் பயணிக்கும் 
அண்ட நிகர் ஆழத்தில் 
நான் கத்தும் பாடலில் 
உனக்குப் பிடித்த வரிகள் 
ஏராளம்! 

காலிடுக்கில் பிரானாக்கள் 
கவ்விக் கிழிக்கும் 
ரத்த வாடையிலும், 
சத்தக் களேபரத்தில் 
விற்பனை ஆகா என் 
பாடலிலும், 

மூச்சோடு பெரிதுருளும் 
நின மணத்தின் குமட்டலிலும், 
நினைவோரம் 
ஒட்டியிருந்து எனைத் 
தேற்ற நினைக்கும் கவிதையிலும், 

உள்ளத்துள் போர் செய்கிறது 
உன் கோபப் பொழுதில் 
உனை அறிந்தும் 
தவறு என்மேல் இருந்தும் 
நான் 
மறந்த மௌனம்!! 

விவேக்பாரதி
22-09-2022

Comments

Popular Posts