இளைய மீசைக்குக் கடிதம்



இந்த,
இளைய மீசை கவிஞன் பார்க்க
    எழுதுகின்றேன் கடிதம் - இது 
இதயத்திலே பிரித்துப் படித்து 
    இசைத்துப் பார்க்கும் வடிவம்
வளர்ந்துவிட்ட நான் எனக்கு 
    மடலை எழுதுகின்றேன் - என் 
மனதை அதற்குள் அடைத்து வைத்து 
    வண்ணம் தீட்டுகின்றேன்! 

உனக்கிருந்த வேகம் இன்றென் 
    உடலில் பாதி இல்லை - நீ 
உயிர்த்திருந்த வேலை போல 
    ஒன்றும் இன்றைக்(கு) இல்லை
அனுபவத்தை தேடினாயே 
    அது நிறைந்து கிடக்கு - நான் 
அடிகள் பட்ட ரணங்கள் கண்ட 
    ஆறுதல்கள் கணக்கு! 

நீ துயின்ற இரவை எல்லாம் 
    நான் விழித்துத் தீர்த்தேன் - தினம் 
நீ சுகித்த காலை எல்லாம் 
    நீண்ட துயிலில் சேர்த்தேன்
காதல் வேண்டிக் காத்திருந்தாய் 
    கடமை ஒன்று கண்டேன் - அது 
காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம் 
    காலை ஊன்றிக் கொண்டேன்! 

ஊரை என்றும் அறிந்ததில்லை 
    உன்றன் உள் உற்சாகம் - அது 
உருண்டு திரண்டு சோம்பலுக்குள் 
    உடைந்த(து) இன்று பாவம்!
பேரை ஆளைப் பார்த்துப் பாடம் 
    பெரிது கற்ற நானும் - எங்கு 
பெய்ய வேண்டும் எனத் தெரிந்து 
    பெயல் நடத்தும் வானம்!

பழைய நிலைமை இந்த நிமிடம் 
    பழைய படிக்கு வேண்டும் - அதன் 
பரவசத்தில் நான் நிறைந்து 
    பறவை ஆக வேண்டும்!
உழைத்து உழைத்துப் பணம் படைக்க 
    உதவி செய்யும் காலம் - நீ 
உள்ள படியே இல்லை என்னும் 
    உணர்வுகளால் சோகம்! 

வெள்ளை யான சுவர்நீ அதிலே 
    வேகமான கிறுக்கல் - அது 
விரட்டுகின்ற காலம் என்ற 
    விரல் படைக்கும் கவிதை
கொள்ளை போன உன்னை இங்கு 
    கொண்டு சேர்க்கக் கேட்டேன் - அக் 
கொள்கை ஒன்றின் காரணத்தால்
    கடிதம் எழுதிப் போட்டேன்!

கிடைத்து விட்டால் உனது பதிலை
    சிக்கிரத்தில் சொல்லு - அக் 
கிளர்ச்சியோடு நீ நெருங்கி
    காதலோடு புல்லு
உடைந்திருக்கும் இந்த நேரம் 
    உன்னை எண்ணும் கவலை - எனில் 
உருளு(து) என்றன் கண்ணின் ஓரம்
    உள்ளம் என்னும் திவலை!!

-விவேக்பாரதி
07 ஆகஸ்ட் 2022

Comments

Popular Posts