முதல்குடி


எரிமலையின் அடிகசியும் மின்சாரத்தில் 
    ஏதேதோ பழச்சாற்றைக் கொஞ்சம் சேர்த்து
உரியதொரு மின்னலையும் மெல்ல தோய்த்து 
    உயிர்போன்ற சல்லடையில் வடித்தெடுத்து
அரிதாக கொதிக்கின்ற குளிர்பாணத்தை 
    அடித்தொண்டச் செருமலுடன் அருந்தினேன்! என்
நிரைநீங்கி மெலிதாகிப் போனேன் அங்கு 
    நிலையென்ன நிகழ்ந்ததென்ன சொல்லுகின்றேன்! 

நேராக நடக்கின்ற என்றன் கால்கள் 
    நெளிகின்ற பாம்பாக நடனம் கொள்ள, 
போர்போல நிமிர்கின்ற என்றன் மார்பு
    பொய்சொன்னதைப் போலக் குறுகிப் போக, 
கூராகப் பார்க்கின்ற என்றன் பார்வை 
    கும்மிருட்டு கூசும்வெயில் இரண்டும் காண, 
சீரான தமிழ்பேசும் என்நா மட்டும்
    தீபோல பலசொற்கள் உறுமக் கண்டேன்!

அமிழ்தத்தின் குடுவையிலே என்னை ஆழ்த்தி, 
    ஆவிவரும் அகில்புகையில் உலர்த்தி வைத்து, 
அமரர்க்கு நேராகச் செய்ததைப்போல் 
    ஆனந்த மயமாக்கி விட்டார்! அங்கே 
நிமிர்ந்தேனா நடந்தேனா பறக்கிறேனா 
    நின்றேனா என்றறியா வண்ணம் போதைக் 
குமிழுக்குள் எழுந்தெழுந்து விழ நேர்ந்தாலும்     
    கொண்டாடும் மனநிலையே நிலைக்கக் கண்டேன்! 

இம்மென்றால் பலகவிதை மனப்பாடம் போல் 
    இயல்பாக சொல்கின்ற நானோ, அங்கு 
கம்மென்று சிலகணங்கள் அமைதி ஆக, 
    கடகடென மறுகணத்தில் முழங்கித் தீர்க்க,
தொம்மென்று தரைவீழ, உடனெழுந்து 
    துள்ளல்கள் ஆட்டங்கள் எல்லாம் செய்ய
சும்மா இருக்காத சுற்றத்தாரும் 
    சூடேற்றி எனையாட்டிச் சிரிக்கக் கண்டேன்! 

பஞ்சுப் பொதிமுகிலின் ஊர்தியில் நான்
    பாராத கோளெல்லாம் தொட்டுத் தீண்டி 
நஞ்சென்றன் மூளைக்குள் ஏற, ஏற 
    நடுவானில் ஒளிப்புள்ளி ஆகிப் போனேன்!
எஞ்சுவதாய் ஒன்றில்லை எனும் படிக்கே 
    எல்லார்க்கைக் கோப்பையையும் நானே வாங்கி, 
கஞ்சிக்கு மிகஏங்கும் ஏழை முன்னம்
    கறிவிருந்து வைத்தாற்போல் குடித்தே தீர்த்தேன்!

இன்பத்துக் காதலிலே இதயம் பூத்தேன், 
    இறுக்கத்தின் சோகத்தின் கண்ணீர் வார்த்தேன்,
துன்பத்து வாழ்வெண்ணி ஏசிக்கொண்டே 
    தூவென்றேன், தத்துவங்கள் பேசி நின்றேன்! 
அன்புற்ற நண்பர்கள் கேட்டதற்காய்
    அர்த்தங்கள் இரண்டுவரும் கவிதை சொன்னேன்,
என்பக்திக் காளிக்கும் மனத்துக்குள்ளே
    ஏகாந்த உரைசொல்லிக் கடிதம் செய்தேன்! 

அழகாக நான்ரசித்த உலகம் என்முன்
    ஆடிற்று நிலைமாறி குலைந்து போச்சு,
குழந்தைக்கும் விலங்குக்கும் நடுவே நெஞ்சம் 
    குழம்பிற்று பாய்ந்திற்று நடுங்கலாச்சு!
விழுங்குகையில் என் தொண்டை எரிந்ததைப் போல்
    விழுந்த பொழுதெல்லாம் எரியும் மானம்! 
தழுதழுத்த குரலில் சொல் குழைவு காண 
    தடுமாறம் அதுமட்டும் இறுதியாச்சு! 

இப்படித்தான் முதன்முதலில் மது குடித்தேன்
    இப்படித்தான் முதன்முதலாய் மயங்கிப் போனேன்
இப்படித்தான் தலையின்மேல் கொம்பும், பின்னால் 
    இறக்கைகளும் என்னோடு முளைக்கக் கண்டேன்!
எப்படியோ நான்நுகர்ந்த கோப்பைத் தேனை 
    எழுத்தோடு விட்டுவிட்டேன்! உங்களுக்கும் 
இப்படித்தான் இருந்திருக்கும் என்பதில்லை, 
    இதயத்தை எழுதிவைக்க எல்லை இல்லை!!

-விவேக்பாரதி
07 ஆகஸ்ட் 2022
 


Comments

Popular Posts