முயல் நரி கதை


நானெனைத் தொலைத்த காட்டின் 
நயங்களைப் பாடுகின்றேன்!
வானதன் கூரை அல்ல, 
வார்த்தைகள் கூரையாகும்! 
கானகம் மர்மம் அல்ல,
கதைகளே மர்மம் செய்யும்! 
மானிடர் அலையும் ஊரே 
மழலைநான் தொலைந்த காடு!

குழந்தையாய் இருந்த போது 
குணத்தினால் தெய்வம், நானும் 
எழயெழ தெய்விகத்தை 
என்னிலே தேய்த்த காடு! 
அழுகையை அடக்கச் சொல்லி,
அதிர்வுகள் தாங்கச் சொல்லி
விழும்விதை முளைக்கும் முன்னே 
விதிகளை எழுதும் காடு! 

நெடியதாம் மரங்கள் இங்கு 
நீளுயர் கட்டடங்கள் 
கொடியதாம் விலங்கெல்லாமும் 
கூடவே திரியும் மாந்தர்
விடியலைக் காணாக் கண்கள் 
விளக்கையே கதிராய்க் காணும்
முடிவிலாப் பகல்கள் சூழும் 
முழுவதும் வெய்யில் காலம்!

இருள்களில் புதைந்திருக்கும் 
இதங்களைப் பாராக் காடு!
பொருளிலே ஆசையாக்கிப்
பொழுதெலாம் அலைக்கும் காடு! 
ஒருகணம் அயர்ந்தால், பின்னால் 
உருள்கிற விலங்கு தின்று 
செரித்திடும் காடு, போலிச் 
சிரிப்புகள் நிறைந்த காடு! 

முகமுடி மாட்டிக் கொண்டால்
முன்னணி வழங்கும் காடு,
அகத்தினில் முள்ளை வைத்து 
அரும்பெனப் பூக்கும் காடு,
புகப்புக ஓட்டை, ஆனால்
பூதமாய்த் தோன்றும் காடு, 
பகைச்சுவை விரும்பும் காடு,
பார்வையால் மயக்கும் காடு!

பந்தயக் குதிரை கோடி 
பாய்ந்திடும் சாலை, மூளைத் 
தந்திர நரிகள் சூழ்ந்து 
தரித்திடும் அரசு, காட்சி
மந்திரத்தால் மயங்கும் 
மந்தைசூழ் நகர்கள், மற்றும் 
எந்திரம் தொட்டுத் தொட்டே 
இயல்பினை மறந்த காடு! 

காட்டினில் சேர்த்த காலம்
கடமையைக் கை திணிக்க
மாட்டிய கொக்கியோடு
மந்தைகள் நடுவில் நானும்
ஓட்டமாய் ஓடுகின்றேன்
ஓய்வினில் வாழுகின்றேன்
ஏட்டினில் கற்றவை தான் 
ஏனெனத் தெரியவில்லை!     

இங்குள பறவைகட்காய் 
என்சிறகைப் புதைத்தேன்!
இங்குள புலிகளுக்காய் 
என்குரல் நிறுத்திக் கொண்டேன்!
இங்குள குதிரைகட்காய் 
இருக்கவும் ஓடக் கற்றேன்!
இங்குள நரிகட்(கு) அஞ்சி
இயல்முயல் நரியாகின்றேன்!!

விவேக்பாரதி
26 ஜூன் 2022

 

Comments

Popular Posts