யோகமாதேவிக்கு தூக்கு | உலக யோகா தினம்


தூக்கு - என்ன பொருள் வேண்டும் என்று தீர்மானித்த புலவர்கள், மன்னர்களைப் பாராட்டி, அதனுடன் தமக்கு வேண்டியவற்றைக் கேட்டு எழுதி அனுப்பும் கவிதைக் கடிதம்.

ஒவ்வொருநாள் முடிகையிலும் என்னைநான் 
தேடுகிறேன் ஓடி ஓடி, 
ஒவ்வொரு கணத்தினிலும்நான் என்னுடலைப்
பார்க்கின்றேன் உள்ளம் வாடி,
ஒவ்வொரு சறுக்கலிலும் மிகுந்தவலி 
காண்கின்றேன் உயிரில் நொந்து, 
ஒவ்வொருநாள் காலையிலும் சோர்ந்தே 
கிடக்கின்றேன் உறக்கத்தில் நான்! 

எக்கணத்தில் என்னைநீ தொட்டாயோ 
அப்போதென் ஏக்கம் எல்லாம் 
வெட்கத்தில் தலைகுணிந்து வீழ்ந்தோடிப் 
போதனடி, வெற்றி என்னுள் 
திக்கெட்டும் நிலைத்ததடி, என்னைநான் 
விரும்பிடவும் திறம் உண்டாச்சு! 
இக்கட்டில் இப்போதோ தவிக்கின்றேன் 
எனைமீட்க இறங்குவாயா?

திடமுடைய கல்லென்று உடலிருந்த 
வரைவானம் திறக்க வில்லை 
உடல்வளைய உள்வளையும் நீயுரைத்தாய் 
அதுவரையில் உணரவில்லை 
திடுமெனவோர் மின்னலெனத் திசைகாட்டி 
நீமறைந்தாய், திரும்பி வந்து 
கடனாகவேனும் எனைக் காப்பாற்றும் 
நாள்வேண்டிக் கதறு கின்றேன்! 

காலைகளில் சுடரில்லை, கனவுகளில் 
இதமில்லை, கடமை ஆற்றும் 
வேலைகளுக் களவில்லை என்றாலும் 
வேதனைகள் விலகவில்லை! 
பாலைவனச் சுடுதரையில் தண்ணீராய் 
உனைவேண்டிப் பார்த்துக் கொண்டே 
ஓலமிட்டுக் கரைகின்றேன் எந்தவழி 
வந்தெனக்கும் உதவுவாயோ?

யோகமெனும் ஆழியிலே சிற்றலையாய்க் 
கால்தீண்டி உணர்ச்சி தந்து 
வேகமெனும் வாழ்க்கையிலே வேகத் 
தடைதந்து வெறுமை தந்து 
சோகமென்றும் சோம்பலென்றும் சுற்றியிருந்(து) 
எனைக்கொன்ற துயர்கள் மாய்த்துத் 
தாகத்தில் தவித்தவனைத் தாங்கிக்கை 
அணைத்தபடி தண்ணீர் தந்தாய் 

இன்றதுபோல் செய்வாயோ? இருள்களைய 
வருவாயோ? எண்ணி எண்ணி 
நின்றஇடத்தே இருந்து நகராமல் 
கூவுகிறேன் நிலையில்லாமல் 
கொன்றிருக்கும் சோம்பலிலே குமைகின்றேன் 
என்தேவீ கும்பிட்டுன்னை 
நன்றியுடன் அழைக்கின்றேன் மீட்கவரும் 
நேரம்தான் நலம்கொள்வேன் நான் 

இதுவேண்டும் அதுவேண்டும் எனக்கேட்டுப் 
புலவர்கள் இசைக்கும் பாட்டின் 
கதைகேட்டே மன்னர்கள் புரந்தருளிக் 
காப்பாராம் கவிஞன் நானும் 
மதுசேர்க்கும் மயக்கம்போல் மணம்சேர்க்கும் 
கிறக்கத்தில் மயங்கிக் கொண்டே 
விதவிதமாய் அழுததெல்லாம் தூக்கெனவே 
எழுதுகிறேன் வேண்டல் கேளாய் 

பழையபடி காலைவரும் கதிரவனாய் 
எனையெழுப்பும் பகல்கள் வேண்டும் 
முழுவதுமாய்க் குட்டையிலே மூழ்கிக் 
கிடக்குமெனை முகிழ்த்தல் வேண்டும் 
வழுக்காமல் வலிமைபெறச் சறுக்காமல் 
சக்திபெற வழிகள் வேண்டும் 
புழுங்கித் தவித்திடுமென் உடலுக்குள் 
புத்துணர்ச்சி புதுக்குவாயே!! 

விவேக்பாரதி
02 ஏப்ரல் 2022

Comments

Popular Posts