கண்ணன் வந்த களிப்பு | இரட்டை மணிமாலை

 வெண்பா

 

நீல மணிவண்ணன் நித்திலமாய்ப் பூத்துவிட்டான்

கோலம் எழுதிநீ கொண்டாடு – ஜாலமாய்

மண்ணில் பலசெய்து மானிடரை வாழ்விக்க

கண்ணன் பிறந்தான் களி (1)

 

விருத்தம்

 

களித்தாடிக் கொண்டாடு தோழிநம்மைக்

காக்கின்ற  மயில்வண்ணன் தோன்றி விட்டான்

வெளித்தோற்றம் கருநீல மாகும்அந்த

விரலெல்லாம் செந்தாம ரையாம்வான

விளக்கைப்போல் கண்களிலே ஒளியாம்கண்ணன்

விளையாட்டைப் பார்க்கின்ற போதோ அள்ளி

அளிக்கின்றான் கைபிசைந்த மண்ணைகண்ணன்

அழகுக்கே உரித்தான சேட்டைப் பிள்ளை (2)

 

வெண்பா

 

பிள்ளையிவன் வந்தான் பிடியில்சிக் காமலினி

கிள்ளையென நம்யசோதா கீழ்மேலே – துள்ளிடுவாள்

கோகுலத்தில் வாழ்கின்ற கோபியர்நம் காதலுக்கு

ஆகுலமே கண்ணன் அழகு. (3)

 

விருத்தம்

 

அழகுக் கண்ணன் குழலினால்

அமுதப் பாட்டுப் பாடுவான்

பழகும் போது சேட்டைகள்

பண்ணு கின்ற பாலகன்

வழக்கா மாக வெண்ணையை

வாயில் அப்பிக் கொள்ளுவான்

மழலை மாறா குணத்தினன்

மலையை விரலில் தூக்குவான் (4)

 

வெண்பா

 

வான நிறம்பார்த்து வாயைப் பிளந்தோம்நாம்

கான வழியெல்லாம் கன்றானோம் – மோனத்தில்

கண்ணன் நமையீர்க்கும் காந்தம் அறியாமல்

வண்ணமாய்ப் பின்தொடர்தல் வாழ்வு (5)

 

விருத்தம்

 

வண்ண உலகை வளிமண் டலத்தை

வாயில் காட்டுவான்!

கண்ணன் பெரிய கள்வன்பெண்கள்

கட்டிச் சென்றிடும்

வண்ணப் புடவை களைத்தி ருடிப்பின்

வாலை ஆட்டுவான்

எண்ண மெல்லாம் கண்ணன் மட்டும்

இருப்பான் தோழியே(6)


வெண்பா

 

தோழியே வா,வா தொடர்ந்து யசோதையிடம்

ஆழிவண்ணன் லீலை அடுக்கிடலாம் – வாழி!யவள்

கண்ணனை ஆங்கழைப்பாள் காதல் முகத்தைநாம்

கண்டபடி நிற்போம் கரைந்து. (7)

 

விருத்தம்

 

கரைந்திடும் போதினில் கண்ணனின் பனிவிழும்

கண்களினா லேகுளிர் உண்டாகும்

பரிதியும் அங்கணம் அவனிடம் அனுமதிப்

படிவத்தில் கையெழுத் திற்குநிற்பான்

அரியவன் பசுவுடன் காட்டிலி ருக்கையில்

அரக்கர்கள் அங்கணம் வந்துவிட்டால்

தெரியுமா தோழிநம் கண்ணனோ அவர்களைத்

திசையெங்கும் பறக்கபந் தாடிடுவான் (8)

 

வெண்பா

 

பந்தாடும் கண்ணன் பளிங்கு விரல்களவை

செந்தாம ரையோ சிறுமலரோ – இந்தாடா

வெண்ணையென நாமே மிகத்தரலாம் ஆனாலோ

கண்ணனெழில் அந்தக் களவு. (9)

 

விருத்தம்

 

களவினைச் செய்திடும் போது

கண்ணனை கையொடு பிடித்து

வளர்த்தவள் யசோதையி டத்தில்

வார்த்திட செல்கையில் நம்மைக்

குளத்தினில் தள்ளிந கைப்பான்

குளத்துள மீன்கள னைத்தும்

வெளிவரும்மீன்களை நம்மேல்

விட்டவன் மீண்டும்ந கைப்பான் (10)

 

வெண்பா

 

நகையே தரித்திருக்கும் நாயகனாம் கண்ணன்

சுகிக்கவெப் போதும் சுகந்தன் – அகத்திலவன்

சற்றே நுழைந்தாலும் சார்ந்துவரும் வாசனையில்

அற்றே வினைதொலையும் ஆழ்ந்து  (11)

 

விருத்தம்

ஆழி நடுவே எப்படித்தான்

அமைதி யாக இருந்தானோ

தோழிஆனால் அவன்நமக்குத்

தொல்லை கொடுக்க மறந்ததில்லை

வாழும் இந்த வாழ்க்கைக்குள்

வண்ணக் கண்ணன் தொல்லையின்றி

பாழும் உறக்கம் வந்தலில்லை

பால னைநாம் விட்டதில்லை! (12)

 

வெண்பா

 

இல்லை குறைநமக்கு இன்பமெலாம் கண்ணனெனும்

முல்லைச் சிரிப்பழகாய் முன்னிருக்க – தொல்லைதான்

ஆடை எடுத்தான்தான் ஆனாலும் வேய்ங்குழலின்

மோடியிலே சாய்ந்தோம் முழுது.(13)

 

விருத்தம்

 

முழுதாக அவனுடைய சேட்டையெல்லாம் கண்டுவாழும்

மோக வானம்

மழைபெய்தால் மழைத்துளியில் கண்ணனவன் மழலைமுகம்

மட்டும் தோன்றும்

குழந்தையவன் திக்குகின்ற வாய்ப்பேச்சைக் கேட்டுவிட்டுக்

குழல்கள் நாணும்

அழகனைநாம் காணாமல் நம்வீட்டுச் சமையலறை

அடம்பி டிக்கும் (14)

 

வெண்பா

 

அடம்பிடிக்கக் கண்ணன் அவதரித்தான் கொஞ்சிப்

படம்பிடிக்க நாம்வந்தோம் பாரில் – வடம்பிடித்து

ஆசையெனும் தேரிழுக்கும் ஆயர்கோன் நன்முகத்தில்

மீசையிலா ஆண்மை முருகு (15)

 

விருத்தம்

 

குட்டிப் பாதங்கள் குவலயத்தில் பட்டவுடன்

குதூகலம் மாகும் பூமி

எட்டி அவன்வானைப் பார்க்கையிலே இருள்வானம்

எழில்கொஞ்சி உருவம் மாறும்

சட்டிக் குள்ளிருக்கும் வெண்ணையெலாம் அவன்தொடாமல்

சத்தமிட்டே அழுகும்!  அவனோர்

கெட்டிக் காரன்தான் நமைமயக்கும் வழிதெரிந்த

கில்லாடி தானே கண்ணன்! (16)


வெண்பா

 

கண்ணாவா என்றழைத்தால் காட்சி மறைத்திடுவான்

சொன்னால்கேள் என்றுரைத்தால் சோதிப்பான் – பின்னல்

பிடித்திழுக்கும் சேட்டைப் பிரியனவன்கொஞ்சி

நடித்திழுக்க போவோம் நடந்து.(17)

 

விருத்தம்

 

நடப்பதெல்லாம் நன்மை என்பான்

நாடகத்தை இயக்கி நடிப்பான்

கொடுத்தெல்லாம் அவனுக் கென்பான்

கொடைசெய்வான்பறிப்பான்தின்பான்

முடிவுகளை முன்பே அறிந்து

முடுக்கிவிடத் தெரிந்த பையன்

மடிமீது அமர வைத்தால்

மத்தாப்புப் போல் சிரிப்பான் (18)

 

வெண்பா

 

சிரிப்பான் அழுவான் சினப்பான் புழுதி

தரிப்பான் மணலில் சரிப்பான் – உரைப்பதெதுவும்

கேளாத தாய்நடிப்பான் கேலிசெய்வான் இத்தனைக்கும்

ஆளாக வேவந்தோம் ஆம். (19)

 

விருத்தம்

 

ஆமாண்டி தோழி ஆமாம்

அவன்செய்த அத்த னைக்கும்

ஏமாளி யாக ஆனோம்

இருந்தாலும் இன்னும் இன்னும்

ஏமாற ஆசைகண்ணன்

இசைக்காக கோடி கோடி

மாமாங்கம் இந்த மண்ணில்

வாழ்ந்திடலாம்காப்பான் நீலன் (20)


-விவேக்பாரதி & வெ விஜய்

Comments

  1. ஆஹா ! கான வழியெல்லாம் கன்றானோம்.....உண்மை
    இரட்டை மணிகளுக்கும்
    எனது
    அன்பும் ஆசிகளும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts