அவன் பெயர் உத்தமன்

இந்தியா சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆகிவிட்டன. இதைப் பவள விழா என்று பாரதம் முழுக்க கொண்டாடுகிறது. இந்தப் பவளத்தை நாம் கண்ணாரக் கண்டு, மனதார நினைத்து, உடலார சுவாசிக்க, எத்தனை வீரர்கள் தங்கள் கண், மனம், உடல் எல்லாம் வருந்த உழைத்தார்கள்? ஆக இந்தக் கொண்டாட்டம், மேலிருக்கும் கொடிகளுக்கு மட்டும் இல்லை... அதை ஏற்றி வைத்த கம்பங்களுக்கு. சொல்லப் போனால், கம்பம் தாங்கும் அஸ்திவாரங்களுக்கும்தான். 

மூன்று வண்ணத்தில் நமது தொப்புள் கொடி பறக்கிறது. கீழே ஆல்போல் வளர்ந்த கம்பம் தாங்குகிறது, அடியில் தாங்கும் தியாக வேர்களை இப்போது கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். எத்தனை ஆயிரம், லட்சம் மக்கள்.. இன்று கோடியில் வாழும் நமக்காக கொலைகளப்பட்டார்கள்… எத்தனை நூதனப் போராட்டங்களை நம் முன்னோர்கள் முன்னேற்றிக் கொண்டு சென்றார்கள்? எத்தனை லிட்டர்களில் குருதி அபிஷேகத்தை வாங்கிக் கொண்டு, அந்த சுதந்திர தேவி நமக்கு தரிசனம் ஆனாள். இவற்றை எல்லாம் நினைக்கும்போது, ஒரு வீரனின் கதை நினைவுக்கு வருகிறது. 

அவன் பெயர் உத்தம்சிங்.. அப்படித்தான் அவனது பெற்றோர் அவனை அழைத்தார்கள். ஆனால், தனக்கு அவன் வைத்துக்கொண்ட பெயர், ராம் முகம்மது சிங் ஆசாத். ராம் - இந்து; முகம்மது - முஸ்லீம்; சிங் - சீக்கியன்; ஆசாத் - விடுதலை என்பதன் உருது பதம். 

உத்தம்சிங், பஞ்சாப் மாநிலத்தில் எழுந்த உணர்ச்சி பூகம்பம். காத்திருந்து வெடித்த கன்னிவெடி. நம்மூர்க் குயிலி போல, இவன் ஒரு குயிலன். 1919ம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய ஒரு பெரும்பாவத்தில் முளைத்த புண்ணிய மூலிகை - உத்தம்சிங் 

பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில், 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டனர். எல்லாரும் சீக்கியர்கள். அவர்களுடைய பொங்கல் திருவிழாவான பைசாகியை, பக்தியுடன் கொண்டாடத் திரண்டனர். குழந்தைகள், பெண்கள், ஆடவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எல்லாரும் பாசத்துடன் கூடி இருந்தனர். அந்த மக்கள் கூட்டம் இந்தியர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ஆங்கிலேயர் வயிற்றில் புளியைக் கறைத்தது. இன்னொரு சிப்பாய்க் கலகம் உருவாகிவிடுமோ என்று பயந்தார். கூட்ட நெரிசலில் இருந்த மக்களை விட, அதைக்கண்ட ஆங்கிலேயருக்கு அதிகம் வியர்த்தது. 

பக்திக்குத்தான் பைசாக்கி, ஆனால் பயந்த ஆங்கிலேயர் கண்ணுக்கு அது பயங்கரவாதமாகத் தெரிந்தது. சூடு தாங்காத வெள்ளைத் தோலுக்கு, கூட்டமும் ஆகாது என கொந்தளித்தனர். கவனர் டையர் என்னும் கொடிய மிருகம், ஜென்ரல் டையர் என்னும் குருதி வேட்டையாடிய நரியின் கண்ணைக் கட்டி, பூக்காட்டுக்குள் வெறியேற்றி அனுப்பி வைட்டான். பூக்களை நரி என்ன செய்யும்? நரியின்முன் பூக்கூட்டம் என்ன செய்யும்? இரண்டுக்கும் மத்தியில், நரித்தோல் போர்த்திய ஆடுகள்தான் என்ன செய்யும்? 

பார்க்கவும், சேர்க்கவும் சின்ன இடம்தான் ஜாலியன் வாலா பாக். அங்குதான் மக்கள் கூடி இருந்தனர். குருமார்கள் பேச ஆரம்பிக்கவில்லை. மக்கள் காத்திருக்கிறார்கள். கூடிய கூட்டத்தை முழுதும் மூடியது அரங்கம். வேட்டை நெடி வீச அந்த ரத்த நரி, மூளை கழுவப்பட்ட சீருடை ஆடுகளுடன், பற்களைச் சீவிக்கொண்டு வந்தது... ஜாலியன் வாலா பாக் அரங்கத்தின் வாசல்களை வெளிப்பக்கம் தாழிட்டான் டையர். உள்ளிருக்கும் ஜனங்களை உயிர்களென்றும் பாராமல் சுட்டுத்தள்ளக் கத்தித் தள்ளினான். ஊ என்றதும் உறுமும் நாய்போல், அவன் வார்த்தைக்கு அடிபணிந்த, இந்திய சிப்பாய்களே மக்களை ஈவு இறக்கமின்றி சுட்டுத் தள்ளினர். 

இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் இருவர். இருவரது பெயரும் டையர். ஒருவன், படையை நடத்திச் சுடுதல் நிகழ்த்திய ஜெனரல் டையர். இன்னொருவன், அதற்கு ஆணையிட்ட, கவர்னர் டையர். டையர்- பெயருக்கேற்ற ரத்த சாயம் இருவரது சட்டைகளையும் கழுவியது. 

எதையோ சாதித்த கம்பீரத்தில், விசாரணை கமிஷனிலும் அவன்  “துப்பாக்கி ரவை தீரும்வரை சுட சொன்னேன்! ஆங்கிலேயரை எதிர்த்தால் இதுதான் கதி எனக் காட்ட நினைத்தேன்” என்றான். சாந்த உருவம் காந்தியையே இது உலுக்கியது. பொத்துவரும் வீரம்கொண்ட உத்தம சிங்கம், இங்குதான் புதுப்பிடறி முளைத்து, அதைச் சினத்துடன் சிலிர்த்தது. 

ஜாலியன் வாலா பாக் சுவர்களின் ரத்தக் கரைகள், வினாக்குறிகளாக உத்தம் சிங்குக்குத் தெரிந்தன. கனவில் ஒருவேளை அவையே வந்து அவன் கழுத்தை நெறித்துக் கேள்வி கேட்டிருக்கலாம். அந்த வீரியத்தில், அவனது இலக்கை அவன் நிர்ணயித்தான். கேள்விகளுக்குப் பதில் சொன்ன நினைத்தான். இரண்டு டையர்களின் இதயங்களையும் இவனே பிளந்து பிராயச்சித்தம் செய்யத் துடித்தான். அதுதான் பாரத தேவிக்கு இவன் செய்யும் அர்ச்சனை என்று நினைத்தான். கள்ளத் தோணிகளில் வெளிநாட்டுக்குப் பயணித்தான். லண்டன் அடைந்தான். இதற்கெல்லாம் 21 வருடங்கள் ஆகின. ஆனாலும் காத்திருந்தான். ஞாலத்துக்குத் தன் பதிலைச் சொல்ல நினைத்த உத்தமன், காலம் கருதி இருந்தான். அதற்குள் ஜெனரல் டையர், வாத நோயால் மாண்டு போனான். 

வாதம் போக, மீதம் இருந்தவன் ஆளுநராக இருந்த மைக்கேல் டையர். எப்படியோ, டையர் வீட்டிலேயே வேலைக்குச் சேர்ந்தான். சிறுகச் சிறுகக் காசு சேர்த்து ஒரு கைத்துப்பாக்கி வாங்கினான். வாங்கிய அன்றே டயரைக் கொன்றிருக்கலாம். ஆனால், வேலைக்கரன் எஜமானன் சண்டை ஆகிவிடும் என்று யூகித்தான். காத்திருந்து லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் வைத்து ஆளுநர் டையரைச் சுட்டுக் கொன்றான். தாகத்தில் இருந்தவனுக்கு அமிர்தம் கிடைத்ததுபோல், 21 வருட தவத்தின் பலனாக, அவன் கண் முன் டையர் துடித்து இறந்து விழுந்தான். பக்கிங்காம் அரண்மணைச் சுவர்களைப் போல் பிரட்டன் தேசமே அதிர்ந்தது. ஒரு டையரைக் காலம் கொன்றது.. இன்னொருவனை உத்தமனின் கைத்துப்பாக்கி சாய்த்தது. உத்தமன், கைதிக் கூண்டிலும் நிறுத்தப்பட்டான். 

குற்றம் செய்து தப்பிக்க அவனுக்கு மனமில்லை. ஏனெனில் அவன் செய்தது குற்றமே இல்லை. நீதிபதி முன் அவன் பேசிய பேச்சுகள், லண்டன் சுவர்களில் இன்னும் பதிந்திருக்கும். அவனது ஆணித்தரமான குரலை நினைத்தால், அந்தக் கைதிக் கூண்டுக்கு இன்றும் வியர்க்கலாம். அவனது ஆக்கிரோஷமான விடுதலைப் பேச்சு, நீதிமன்ற விட்டங்களைத் தூளாக்குமோ என்று அந்தக் கட்டடமே அச்சப்பட்டிருக்கும். அப்படிப் பேசி, தனக்கான முக்தித் தீர்ப்பை, சாகும்வரை தூக்கு என்ற தண்டனை மூலம் பெற்றான். 

புகழுடம்பு ஏறிவிட்ட உத்தமன் ஆன்மா, பூத உடம்பு இறப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தூக்குக் கயிற்றை, ஒரு மலர் நாரை ஸ்பரிப்பதுபோல் ஸ்பரிசித்தான். வந்தே மாதர முழக்கத்தை அவனது வாயும், கபிர்தாஸின் புத்தகத்தை அவனது விழியும் கடைசிவரை நிலைநிறுத்தி வைத்திருந்தன. 

இளைஞன், சுத்தமான வீரனாக இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்டான். வணிகம் செய்ய வந்து, வளைத்துப்போட்டு நாட்டையே ஆக்கிரமித்தனர் ஆங்கிலேயர். அவர்களது மண்ணில் ஆறடி நிலத்தை ஆக்கிரமித்தான் உத்தமன். 1940ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவனது உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. ஆனால், அவன் வைத்த சூட்டுக்கு, 37 வருடங்கள் கழித்துதான், இந்தியாவுக்கு சுரணை வந்தது. ஒரு உத்தமன், இங்கு நடந்த பாவத்துக்கு பரிகாரம் செய்தது நினைவுக்கு வந்தது. அப்போது இந்தியாவின் பிரதமர் இந்திரா. மலர்வளையம் வைத்து அந்த மனிதனுக்கு கோயில் எழுப்பினார். தெய்வ சாட்சியாய் இந்திய மண்ணுக்கும், வீரம் விழையும் நெஞ்சங்களுக்கும் அவன் உரமானான். 

ஆக, இனி பஞ்சாப் கோதுமைகளை பக்தியுடன் பாருங்கள்.. ஒருவேளை நம் சப்பாத்திகள் உத்தம்சிங் உரமான மண்ணில் இருந்தும் வந்திருக்கலாம்.  

#ஜெய்ஹிந்த்! #சுதந்திரதினவாழ்த்துகள் #இந்தியவிடுதலைவேள்வி 

-விவேக்பாரதி
14.08.2021 

Comments

Popular Posts