ஆடிப்பாவை

– குமுதம் இதழ் நடத்திய கதைப்போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை –

”என்ன விட்டுப்போ! யூ டோண்ட் டிசர்வ் மி” இதுதான் சீமா என்னைப் பிரிகையில் சொன்ன வார்த்தைகள். சாராவைப் பார்க்கச் சென்ற மாலையிலும் அந்த வார்த்தைகள்தான் என் காதுக்குள். “எனக்குத் தகுதி இல்லன்னு சீமா எப்டி சொல்ல முடியும்?” எனக்குள் வெகுநாட்களாய் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்குத்தான் சாரா விடையாக வந்தாள்.

சாரா! ஊட்டி கான்வெண்டிலிருந்தே என்னுடன் படிக்கும் தோழி. எங்கள்  அப்பாக்கள் க்ளப்பில் சேர்ந்து சீட்டாடுவார்கள். ஓரிரு முறை பேசியிருக்கிறேன்  அவ்வளவுதான்! அந்தப் பரிச்சயத்தை மட்டுமே கொண்டு அவளை அழைத்திருந்தேன். எனக்கு அவள் உதவச் சம்மதித்தால், அந்தக் காரியத்தை முடித்துவிட்டு நான் இந்த நாட்டைவிட்டே பறந்துவிடத் தயாராயிருந்தேன். 

முகமெல்லாம் புன்னகையாய் வெண்ணிறச் சுடிதாரில் ஒரு புள்ளிமான் போல் நடந்து வந்தாள் சாரா. என் எதிரே அமர்ந்தாள். நான் கையசைக்க. அவளுக்கும் சுடச்சுட காஃபி வந்தது. பதட்டம் தாங்காமல் சூடான காஃபியை விழுங்கி நாக்கைப் பொசுக்கிக் கொண்டாள். அவளது பதட்டம் எனக்குப் பிடித்திருந்தது.

பழைய கதைகள் கொஞ்சம் பேசினோம். ஆனால், என் கேள்வி என்னை உந்திக் கொண்டேயிருந்தது. அன்றைய நாளில் சீமாவைவிட அவள் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளை அவ்வளவு வெறுத்துக் கொண்டிருந்தேன்.. 

சாராவின் கோப்பையையே பார்த்திருந்த என்னைக் கையாட்டி மீட்டாள்.

“என்னமோ யோசனை போல! எப்டி இருக்கா சீமா?”

சிரித்துக்கொண்டே கேட்டாள்.  நான் முரைத்தேன். 

“ஹப்பா! காஃபிய விட அனல் அடிக்குது! காம் டவுன்! எனக்கும் தெரியும்”

“அப்றம் எதுக்குக் கேட்ட?” கடுகடுத்தேன். 

“இல்ல! நீ இன்னும் அவள லவ் பண்ற, அதான் அவகிட்ட தூது போக எனக்கு இந்த லஞ்ச உபசாரமெல்லாம்னு நெனச்சேன்” என்றதும் நக்கலாகச் சிரித்தேன். 

“அவ என்ன சொன்னா தெரியுமா? நா அவளுக்குத் தகுதி இல்லாதவனாம். என்னோட தகுதிய பத்தி பேச அவ யாரு சாரா? அவ யாரு?”

கடுங்கோபத்தில் மேஜையைக் குத்திவிட்டேன்! மேனேஜர் கல்லாவிலிருந்து முரைத்தார். பில்லைக் கட்டி என்னை வெளியே நடத்திக் கூட்டி வந்தாள்.

நடக்கத் தொடங்கினோம். ஆனால், அவளிடம் சொல்லக் கொஞ்சம் தயக்கப்பட்டேன். சாரா, அப்பாவுக்குத் தெரிந்தவர் மகள். தவறாக நினைத்துக்கொண்டு போய்விட்டால் அப்பாவிடம் அசிங்கமாகிவிடும். ஆனால், அந்தத் தயக்கதைக் கண்டுகொள்ளாமல் ஆழ்மனத்தில் என் கேள்வி ஆடிக் கொண்டிருந்தது.

நாங்கள் நடந்து கொண்டிருந்த மலையேற்றம் ஆள் நடமாட்டம் இல்லாமல் ஆனது. அதுதான் சந்தர்ப்பம். அவள் செருப்பால் அடித்தால்கூட யாருக்கும் தெரியாமல் வாங்கிக் கொண்டு நகர்ந்து விடலாம் என்று பட்டது.

“சாரா!” அவளை நிறுத்தினேன்!

“சீமாவ என்னால மறக்க முடியல! அவள மறக்க எனக்கு நீதான் உதவ முடியும். அவ மேல விருப்பம் இல்ல! வெறுப்பு மட்டும்தான்! ஆனா அதுவும் என்ன விட்டுப் போனாதான் ஐ குட் மூவ் ஆன்! உனக்குப் புரியுதா?”

ஆமாம் என்று தலையசைத்தாள்.

“அவ முன்னாடி நம்ம லவ் பன்ற மாதிரி உன்னால நடிக்க முடியுமா?”

பளிச்சென்று கேட்டுவிட்டேன்! கேட்டதும் அவள் முகம் குழப்பமானது. கண்களை மேலும் கீழும் அப்படிச் சுழற்றினாள். உதட்டிலிருந்து எப்போது வசை வெடிக்கும் என்று நான் தயங்கி நின்றேன்.

“ஹாஹாஹா”

அப்படியொரு பெருஞ்சிரிப்பு சிரித்தாள்! நான் காஃபி ஷாப்பில் சிரித்ததைவிடப் பல மடங்கு நக்கல். எனக்கு எரிச்சல் ஆனது.

“ஓக்கேன்னா சொல்லு, இல்லேன்னா செட் ஆகாதுன்னு நகர்ந்துரு! இப்டி சிரிச்சு என்ன கலாய்க்காத” என்றதைக் கேட்டு அமைதியானாள்.

“உன்ன நா காதலிக்குறேன்னா, நா உன்ன எப்டி கூப்டணும்? தருன்”  மீண்டும் நக்கலாகக் கேட்டாள். 

அவள் சம்மதித்தது எனக்கு திருப்தியாக இருந்தது. 

”என்ன தருன்னே கூப்டு! அப்றம் இது வெளிய யாருக்கும் தெரியக் கூடாது. நாம எப்பவும் போல ஃப்ரென்ட்ஸ்தான். உன்ன என்கூட பார்த்தாலே சீமா வில் கெட் ஹர்ட்! எனக்கு அது போதும்” என்றேன்.

சிரிப்புடன் தலையசைத்துப் புறப்பட்டாள். 

சீமாவைப் பழிவாங்க சாரா நல்ல துருப்புச் சீட்டு. என்மேல் சாராவின் ஆர்வம், சீமாவுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். நானும் சாராவும் சேர்ந்திருப்பதைக் கண்டாலே அவளுக்கு எரியும். அந்த எரிச்சல் எனக்குள் எரியும் கேள்வி நெருப்புக்குத் தண்ணீர். ஆசுவாசமாக அன்று தூங்கப் போனேன்.

மறுநாளிலிருந்து எங்கள் காதல் நாடகம். சாரா கெட்டிக்காரி! சீமா பார்க்கும்போது என் தோளில் கைப்போட்டு பேசுவாள். சீமாவை வெறுப்பேற்றுவதில் அவள் என்னைவிட ஆர்வமாய் இருந்தாள். அவள் என்மேல் வைத்திருந்த ஆர்வமும் வெளிவர ஆரம்பித்தது. என்ன நடந்தாலும் ஊருக்குக் கிளம்பும்முன் அவளிடம் நமது நிலையைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். 

நாங்கள் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் தருணங்களில் அவளிடம் எனக்கும் சீமாவுக்குமான காதலையே அதிகம் பேசினேன். 

நானும் சீமாவும் ஐந்து வருடம் காதலித்தோம். சீமா ஒரு குழப்பக்காரி. சுய மரியாதைக்கும் ஆணவத்துக்கும் வித்யாசம் அறியாதவள். தனக்கு வேண்டுவன கிடைக்காவிட்டால் வானுக்கும் மண்ணுக்கும் அப்படிக் குதிப்பாள். தனக்குப் பிடிக்காதது நேர்ந்தால் தனக்கு வேண்டியவர்கள் என்றுகூட பார்க்காமல் தூக்கிப் போட்டு உடைப்பாள். குறிப்பாக என்னை, அவளுடைய ஆட்டத்துக்கு ஆடும்படிதான் வைத்திருந்தாள். நவரசமும் கோபமாய் மட்டுமே காட்டத் தெரிந்த அழகு ராட்சசி! 

இதையெல்லாம் நான் சாராவிடம் சொல்லச் சொல்ல சாரா என்னிடம் நெருங்கினாள். எனக்கு அந்நெருக்கம் புதிய அனுபவங்களை உண்டாக்கியது. 

எங்கள் நாடகம் உண்மையில் வெற்றி பெற்றது. சீமா எரிச்சலில் செமெஸ்டர் பரீட்சைகள் எழுத மட்டுமே கல்லூரிக்கு வந்தாள். அவளை வெறுப்பேற்றியதே எங்களுக்குப் பெருவெற்றி. நெஞ்சுக்குள் அந்தக் கேள்வி மெல்ல மெல்ல அடங்கியது.

ஆனால், புதிய கேள்வி அப்போது வந்த என் பிறந்தநாளில் முளைத்தது. எல்லாப் பிறந்தநாளைப் போல அன்று மாலையும் நண்பர்கள் கேம்ப் ஃபயர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சீமாவும் வந்திருந்தாள். நடுவில் எரிந்த நெருப்பைச் சுற்றி சிலர் ஆடிக் கொண்டிருந்தனர். எனக்கு அருகில் சாரா அமர்ந்து எனக்கும் அவளுக்குமாய் மதுவை ஊற்றிக் கொண்டிருக்கையில், நான் பின்னால் சீமாவின் இருக்கையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சீமா தனியாய் அமர்ந்திருந்தாள். அவள் தோழி தள்ளாடியபடியே வந்து நீட்டிய வோட்காவில் வெறித்தனமாய் சில ஷாட்கள் விழுங்கியபின் சீமா நிதானம் இழந்தாள்.

“அவன் என் அடிம டீ! நா ஆடச் சொன்னா ஆடுவான்! பாடச் சொன்னா பாடுவான்! விட்டுப் போன்னு சொன்னா போய்டுவான்! வாயில்லாத பூச்சி! ஹி டோண்ட் டிசர்வ் மீ யு நோ!”

மறுபடியும் அதே வார்த்தைகள். கோபம் தலைக்கேறியது. அவளை ஓங்கி அறைந்துவிடலாம் என்று நான் பின்னிருக்கைக்குத் திரும்பும் நேரம் பார்த்து சாரா என் சட்டையை இழுத்தாள். நான் அதே கோபத்துடன் அவள் பக்கம் திரும்பினேன். என் கன்னத்தைப் படித்து என் இதழில் முத்தம் கொடுத்தாள். என்னால் விலகவே முடியாதபடி அவள் முத்தம் அத்தனை ஆழமாய் இருந்தது. என் கோபமெல்லாம் தணிந்து மனத்துக்குள் கேள்வி தொற்றிக் கொண்டது.

“இஸ் சாரா இன் லவ் வித் மி?”

ஐயோ! நினைத்துக்கொண்டு பட்டென்று என்னை நான் விலக்கினேன். மொத்தக் கூட்டமும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. சாரா போதையில், “ஹேப்பி பர்த்டே தருன்!” என்று சொல்லி அமர்ந்தாள்.

கையிலிருந்த வோட்கா பாட்டிலை படாரெனக் கீழே உடைத்துவிட்டு அழுதுகொண்டே சீமா ஓடினாள். சற்று நேர அமைதிக்குப்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

நான் ஒன்றும் புரியாமல் சீமா போன திசையையும் சாரா எனக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என் சட்டையைப் பிடித்துக் கீழே இழுத்த சாரா,

“என்ன தருன்? எப்டி நம்ம ஆக்டிங்! அவ்ளோதான்! இனி சீமா உன்ன மாதிரி ஒருத்தன மிஸ் பண்ணத நெனச்சு அழுதுட்டே இருப்பா! யெஸ்! யூ டோண்ட் டிசர்வ் ஹர்! யு டிசர்வ் மோர்!” என்று சொல்லிவிட்டு அவளும் ஆடப் போனாள். அவள் கொடுத்த கோப்பை எனக்கும் முன்னால் அப்படியே இருந்தது. மனதுக்குள் என் கேள்வி  என்னைப் படார் படாரென்று அடித்தது. உள்ளே உற்றுப் பார்த்தால் கேள்வி தலைகீழாய் இருந்தது.

“அம் ஐ இன் லவ் வித் சாரா?”

என் கேள்வி ஏன் இப்படி மாறியது என்று தெரியவில்லை. நெஞ்சு வெடித்திடும்போல் இருந்தது. அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஒரு கை என்னை அவ்விடத்திலிருந்து மீட்க இழுத்தது. சாராதான்.

”வா நடக்கலாம்” என்று இழுத்துக்கொண்டு போனாள். நடக்கும்போதே, 

“நா அப்டி பண்ணுவேன்னு நீ நெனைக்கல ல?” என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன். என் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

“நா உன்ன போதைல கிஸ் பண்ணல. நா உன்ன லவ் பண்றேன் தரூன். இப்ப இல்ல நம்மளோட, 5த் ஸ்டாண்டர்ட் ல இருந்து. நீ சீமாவ லவ் பண்ணது தெரிஞ்சதும், எல்லா ராத்திரியும் நம்ம டூர் ஃபோட்டோவ எடுத்து வெச்சு உன்ன திட்டிக்கிட்டே அழுவேன். என்னோடது ஒன் ஸைட் லவ்வாவே போயிடும்னு கவலப்பட்டேன். அப்போ நீயா எனக்கு ஒரு சான்ஸ் குடுத்த. நீ நடிச்சியான்னு தெரியல தருன். நா நெஜமாவேதான் உன்ன லவ் பண்ணேன்”

கண்ணீர் அவள் கன்னங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.

நிமிர்ந்து பார்த்தேன்.

“நீ நெனைக்குற 5த் ஸ்டாண்டர்ட் தருன் நா இல்ல சாரா!” என்றேன்.

“தெரியும்டா! நீ மாறிட்ட! ஆனாலும் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். தருன், நீ சீமா கைல, அவ சொன்னதெல்லாம் செய்யுற பொம்ம மாதிரி இருந்த! ஆனா எங்கிட்ட உனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ண! நீ நீயா இருந்த! என்கூட இருக்குறதுல என்ன அட்வாண்டேஜ்னு நீ கேட்டா நா இதத்தான் சொல்லுவேன்.”

என்ன பேசுவதென்று தெரியாமல் உறைந்துபோய் நின்றிருந்தேன். அது உண்மைதான். நான் சீமா ஆட்டி வைக்கும் பாவையைப் போல்தான் இருந்தேன். சாராவிடம் என்னை நான் சுதந்திரமாக நிறுவிக்கொள்ள முடிந்தது. சீமாவிடம் தோன்றாத தோழமையும் அக்கறையும் சாராவுடன் ஏற்பட்டது. ஒருவேளை இதுதான் காதலா? தெரியவில்லை! 

அந்த இரவு, என் வாழ்க்கையில் சாராவைக் கொண்டுவந்தது.. என் கேள்விக்கு இனி நான் பதில் சொல்லியாக வேண்டும். சாராவின் கையைப் பிடித்து அவளுக்கு முத்தம் கொடுத்தேன். எங்கள் முத்தத்தின் குளிர்ச்சியில் என் கேள்வி அணைந்தது.

”யெஸ்! ஐ லவ்  சாரா”

எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இப்போது நானும் சாராவும் எங்கள் அறையில் கைகோத்து நிற்கிறோம். “அப்பா! அம்மா! சீக்கிரம் வாங்க வெளிய போகணும்” என்று அதட்டுகிறாள் சீமா குட்டி. 

”யெஸ்! ஐ லவ் சாரா அண்ட் சீமா!!

‘‘எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும் 
ஆடிப் பாவை போல 
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே’’ 
என்கிற ஆலங்குடி வங்கனாரின் குறுந்தொகை வரிகளை தழுவி எழுதப்பட்ட கதை. 


Comments

Popular Posts