கோணாமல் இருக்கும் பேனா


சொற்கள் கணத்த நெஞ்சோடு – நான்
   தொடுவேன் என்று நினைத்தபடி
புற்கள் மீதொரு கால்கொண்டு – தவம்
   புகழும் கொக்காய் என்பேனா...
கற்பனை என்னும் ஆறொழிகி – என்
   கையின் வழியே தாள்களிலே
தொப்பென வீழும் நொடிபார்த்தே – என்
   தோளை உரசும் என்பேனா

காதல் நெஞ்சில் வழிவதனால் – என்
   கண்ணில் அமிலம் சுடுவதனால்
மோதல் இன்றி கவிதைகள் – என்
   மூளை நிரம்பி வருடுவதால்
சாதல் இல்லா வார்த்தைகளை – நான்
   தாளில் நிறைத்துக் காதலிக்குத்
தூது விடுப்பேன் எனநினைத்து – என்
   தொடுதலுக் கேங்கும் என்பேனா

பேனா கொள்ளும் காத்திருப்பு – என்
   பிரியம் வேண்டித் தொடர்கிறது
நானாய்த் தொடுவேன் எனநினைத்து – அது
   நகர்ந்து நகர்ந்து வருகிறது.
வானாய் இருக்கும் என்மனது – முகில்
   வந்தால் தூறும்; அதுவரையில்
கோணா திருக்கும் பேனாவை – கைக்
   கோடுக்க வேண்டும் காலத்தே!!

–விவேக்பாரதி 
2.11.2020

Comments

Popular Posts