தெம்பு நதி தேவை




மாலைமரி யாதையெலாம் தேவையில்லை என்றிருந்தால்
   மாலைவரும் நேரமொரு துள்ளலுமில்லை – அது
   வாய்த்திடாத நேரமொரு துவளலுமில்லை – சுடர்க்
காலைவரும் என்றிரவைக் கண்மூடிக் கழித்திருந்தால்
   கண்களுக்குள் வட்டநிலா பூப்பதுமில்லை – உடன்
   காதலிக்கும் நட்சத்திரம் பார்ப்பதுமில்லை!
 
வேளைவரும் என்றுமட்டும் நெஞ்சகத்தில் நம்பி,உடன்
   வேலைசெயச் சென்றுவிடு நிம்மதியுண்டு  – அதில்
   வெற்றிவரும் நேரம்பெரு சன்னிதியுண்டு  – உன்
தோளைமட்டும் நம்பியின்று தொடங்குகிற காரியங்கள்
   தோற்பதில்லை ஒருநாளில் வெகுமதியுண்டு  – உன்
   தொடக்கத்தை நீநம்பி அதைமதிநன்று…
 
கட்டிவிட்ட பொய்மூட்டை கடைசியிலே போயவிழ்த்தால்
   காற்றினிலே கரைந்துவிடும் பூளைகளாகும் – வெறும்
   கனவுகளால் அமைவதுவே நாளைகளாகும் – இன்று
எட்டுவைக்கும் பாதைக்கொரு ஏற்றமிகு துணிச்சலுண்டு
   எப்பொழுதும் இன்றுமட்டும் நிலையெனவாகும் – நேற்று
   ஏறிவந்து நுரைகிளப்பும் அலையெனவாகும்
 
ஐந்தறிவு விலங்குகளே ஆனந்த லஹரியிலே
   அன்றாடம் ஆடுவதைக் கொண்டிருக்கையில் – அவை
   அன்பில்மட்டும் பார்வைகொண்டு கண்டிருக்கையில் – மனம்
சிந்திக்கிற வழி,அதனை சாதிக்கிற கரமிருந்தும்
   சின்னமனம் வருத்தத்தினால் தேய்ந்திருப்பதா? – உன்
   சிரிப்புமழை இன்றியுளம் காய்ந்திருப்பதா?
 
இருப்பவனுக் கொற்றைவழி பார்ப்பவனுக் காயிரமாம்
   இரண்டுவிழி யோடுமன விழிதிறந்துவை – அந்த
   இதயவொலி சொல்லுகிற மொழியறிந்துகொள் – ஒரு
திருப்புமுனை என்பதெலாம் சிறியபொறி அளவினதே
   திறந்திருக்கும் நெஞ்சிலது மூண்டிருக்குமே – அதில்
   தெம்புநதி கிளைபரப்பி நீண்டிருக்குமே!!   

-விவேக்பாரதி
01.11.2020

Comments

Popular Posts