நான் பறக்கும்போது


நிச்சயம் ஒருநாள் வான 
    நினைவெனைக் கொண்டு போகும் 
அச்சம யத்தில் என்னை 
    அடக்கவே முடியா தம்மா 
கச்சிதம் என்று வானைக் 
    கவிதையாம் சிறகினாலே 
துச்சமாய் எண்ணி, மேலே 
    சூவெனப் பறப்பேன் நானே! 

அடர்த்தியாய்ப் போர்த்தி யுள்ள 
    அழகிய மேக மூட்டை 
கடந்துநான் பாயும் போது 
    கடவுளின் உருவம் தோன்றும்! 
படர்கிற சூரியன்றன் 
    பட்டொளி என்மேல் பட்டு 
உடையெலாம் மின்னும், இன்னும் 
    உயரநான் சென்றி ருப்பேன்

பறவைகள் என்னைக் கண்டு 
    பாடங்கள் பயிலும், விண்மீன் 
நிறையவென் மேலே ஒட்டி, 
    நிரந்தர அணிகள் ஆகும். 
சிறகினை அசைக்கும் போது 
    சிலிர்க்கிற தென்றல் காற்றென் 
நறுமணம் அள்ளிக் கொண்டு 
    நாடெலாம் சேதி சொல்லும் 

தேவர்கள் வியந்து கண்கள் 
    சடசட வென இமைப்பார் 
கூவிடும் சேவல் பார்த்துக் 
    குழம்பிட நான் ஜொலிப்பேன்
வாவென உலகை மொத்தம் 
    மகிழ்ச்சியில் அழைத்து மேலே 
தாவிடும் வேகம் பார்த்துத் 
    தரையெலாம் வாய் பிளக்கும் 

சந்திர வளைவில் கொஞ்சம் 
    சறுக்கிய பின்பு, தேவ 
இந்திர உலகில் கொஞ்சம் 
    இருதயம் தொலைத்த பின்பு 
மந்திர வானை மோதி 
    மல்லிகை போல் பொடித்து 
தந்திரச் சொற்க ளாகி 
    சத்தியம் போல்வாழ் வேனே!!

-விவேக்பாரதி 
27.10.2020

Comments

Post a Comment

Popular Posts