புறப்பட்டு போனவன்

இன்று மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள். 100 ஆண்டுகளாய் அவன் செய்துவிட்டுச் சென்ற மாயத்திலிருந்து மீள முடியாமல்தான் இருக்கிறோம். முப்பத்தொன்பது வயதுக்குள் அவன் வாழ்ந்துவிட்ட வாழ்க்கையை இனி யாரால் வாழ முடியும்?? நினைக்கும்போதே பொத்துக்கொண்டு அழுகையும் பாட்டும் வந்தது. வானவில் கே ரவியிடம் பாடி, அவருடைய கவிதையைக் கேட்டு இருவரும் நெக்குருகி அழுது இன்று காலை இனித்தது. இதோ நான் அழுத பாடல்

புறப்பட்டுப் போனவனைப் பாரடி - புண்
புறப்பட்ட தேசத்தில் மருந்திட்ட தாரடி
வான்விட்டு வந்தவன் வானுக்குச் சென்றதை
வாழ்த்தவா மனம் வேர்க்கவா? - தன்
வாழ்க்கையைத் தனக்கன்றி பிறர்க்கென்று வாழ்ந்ததை
வெறுக்கவா வரவேற்கவா?
ஏன்விட்டுச் சென்றாயென் ஐயனே என்றுவிண்
ஏறியே நான் கேட்கவா? - தமிழ்
எழுத்தோடு வாழ்கின்ற அவனாவி தனையள்ளி
என்னோடு நான் பூசவா?
வெண்ணீர்தன் வேர்வீழ வெந்துநம் பாரதம்
வீழ்ந்திருந்த நாளிலே - ஒரு
வெம்புனல் பாய்வதைப் போலவன் பாய்ந்ததும்
வெற்றியாய்ப் பயிர் செய்ததும்
கண்ணீரில் மனமாடக் கங்குக்குள் உயிராக
கனவினைப்போல் சென்றதும் - சிறு
காலத்தில் நூறாண்டு காணாத தைச்செய்த
கணக்கென்ன நான் கேட்கவா?
பாரதி பாரதி பாரதி என்றுதான்
பண்செய்யும் ஏழை உள்ளம் - அவன்
பாட்டினில் வார்த்தையில் எண்ணப் பிரகாசத்தில்
பாதிநாள் மறந்து துள்ளும்
யாரவன்? தீயவன் அணைப்பதில் நீரவன்
யாண்டும்வாழ் காற்றானவன் - சுடர்
யாழவன் வேலவன் தாய்சக்தி சேயவன்
யாவர்க்கும் பொதுவானவன்!
-விவேக்பாரதி
11.09.2020

Comments

Popular Posts