திருப்பத்து

விநாயகர் காப்பு

பாட்டினிலே பொருள்பற்றி ஒருவன் கேட்கப்
பலநாளாய் இல்லையென்றே ஒருவன் சொல்ல
ஊற்றெனவே உனதன்னை அண்ணி மேலே
ஓடிவந்த திருப்பத்தாம்; இதனைத் தென்றல்
காற்றினிலே ஏற்றியெங்கும் பரப்பிக் காக்கும்
கடமையதை உவந்தேற்பாய் களிறே! எங்கள்
பாட்டினிலே வருவதுமுன் தாய்சொல் அன்றோ?
பாட்டனவன் வார்த்தையுநீ அறிவாய் யன்றோ?

திருப்பத்து

நாம்விட்டு நாளாச்சு நம்மை விட்டு
நாளாச்சா என்பதுதான் தெரியவில்லை
ஆம்விட்டுப் போவதுவும் பின்னால் சேர்ந்தே
ஆரவாரம் செய்வதுமே பணியாக் கொண்டு
பூம்பொட்டு நிறக்கமலத் தேவி நம்மேல்
புதியபல விளையாடல் புரியும் போது
தேம்புற்றுத் தளராமல் அவள்ப திக்குத்
தேனாராம் பாவாரம் சூட்டி வாழ்வோம் (1)

பூவின்றிக் காய்விட்டுக் கனியும் ஆகிப்
பொலிகின்ற பலாவுடன் தேனும் சேர்த்துத்
தாவிவரும் தமிழாலே சூட்டுங் கோதை
தாளடைந்த பின்னாலும் மோனம் காத்தால்
சேவித்தப் பாக்களெல்லாம் திருப்பிக் கேட்போம்!
செய்யவளே செல்வமதன் பதியென் றாலும்
மேவியுடன் உதவிடவே வருவா ளன்றோ?
மேன்மைகொள் தமிழிழக்கச் சகியாள் அன்றோ? (2)

வம்பெதற்கோ என்றவளும் வருவாள்! கேட்ட
வளமெல்லாம் நல்லபடிச் சொரிவாள்! பாயும்
அம்பிருக்குஞ் சொல்லாழி அறிவாள்! அன்னை
அன்பாலே அதற்குமுனம் பணிவாள்! நெஞ்சில்
தெம்புதரும் தேவியைநம் திருவைப் போற்றும்
செந்தமிழைத் தினம்பாடி வைப்போம்! அந்த
உம்பருக்கே கிட்டாமல் மாலுக் கானாள்
உலகுவர ஆட்டங்கள் இடுவாள் தானே! (3)

ஆந்தம்பி! ஆம்ஆம்ஆம் அவளே முன்னம்
அயக்ரீவன் தனையேத்தும் அடியார் பாட்டின்
தீஞ்சுவைக்கே மழைபொழிந்த வரலாற் றோடே
தெளிபொன்னில் நெல்லிமழை செய்தா ளென்னும்
வாஞ்சைமிகுஞ் சேதியெலாம் வாங்கிக் கேட்ட
வளத்தாலே அன்றோநாம் வளர்ந்தோம்? அந்தக்
காஞ்சனையும் கால்கொண்டாள் கருணை கொண்டே
காத்திடுவாள் எள்முனையும் ஐயம் இல்லை! (4)

ஏங்கவிடும் தாய்நம்மை அணைப்பாள் என்னும்
ஏகாந்த நம்பிக்கை ஒன்றே போதும்
தூங்கவிடா மற்கனவைத் தந்தும் உள்ளே
தூயசுடர் போலெழிலாய் வந்தும் நின்றும்
தாங்கரிய மாயங்கள் செய்வாள்! அந்தத்
தாயெண்ணம் ஆரறிவார் அவளை அன்றி?
நாங்கவலை கொள்ளுதலைக் கண்டால் பொங்கும்
நல்லசினக் காரியவள் அன்றோ அண்ணா! (5)

சினத்தாலே தான்வாட்டச் சேதி எல்லாம்!
சினந்தீர்ப்பாய் என்றேதான் செந்தீப் பூவில்
தினமமரும் தேவியைநாம் மீட்டும் மீட்டும்
திருகேட்டுத் தொழுகின்றோம்; அவளோ நாளும்
சினந்தலைகள் அமலைசெயும் பரவை வாழ்வில்
செவிகெட்டாள் போற்குந்தி இருந்திட் டாலும்
தனமலையை நொடியினிலோர் நாளில் தந்தே
தகவிழைப்பாள் காலமதும் கனியத் தானே! (6)

கனியட்டும் அந்நாளாம் கண்ணின் முன்னால்;
கலையட்டும் நம்நிலைமை; திருவே வந்து
முனியட்டும்; அப்போநம் தரித்தி ரந்தான்
முறியட்டும்; திசையெட்டும் தெரித்தே ஓட!
பனியெட்டும் வகைபடரும் இருளில் சற்றுப்
பரிதிவந்தால் கண்முன்னூர் பூத்தல் போலே
இனியெட்டும் அவள்பார்வை என்றி ருப்போம்
இதயத்தா மரையிடத்தைத் துடைத்த வாறே! (7)

துடைக்கையிலே தூசெல்லாம் போயே சேரும்
தொல்தமிழின் வாசமதே தூபம் ஆகும்!
படைத்திடுநம் பாட்டெல்லாம் நைவேத் யங்கள்!
பைந்தமிழின் ஒளிதானே கற்பூ ரங்கள்!
விடைதெரியா நங்கலக்கம் வேள்வித் தீக்குள்
விருப்போடே ஆகுதியாய்ச் சேர்ப்போம்! போகூழ்
தடைக்கற்கள் யாவையுமே தயையால் அந்தத்
தாய்படியாய்ச் செய்திடவே தழைப்போம் நாமே! (8)

தழைத்திருப்போம் செய்யாளின் வரவால், இந்தத்
தரையினிலே அவள்வரும்நாள் திருவிழா தான்;
அழைத்திருப்போம் அதுவரைக்கும்; கடமை செய்து
அமைதியிலே காத்திருப்போம்; வருவாள் அன்னை!
நுழைந்தவுடன் எனக்குனக்கென் றடித்துக் கொண்ட
நூதனமா மமரர்வசம் செல்லா தங்கே
விழையாதே நின்றதிரு மாலின் மார்பில்
வீற்றாளே அதுவன்றோ நமக்குப் பாடம்! (9)

அண்ணனிடம் அவள்வந்தால் தம்பிக் காச்சு!
அன்றியவள் உனையுவந்தாள் எனக்குந் தானே!
முண்டியுடன் பொருதிடவே அமரர் போலே
முட்டாளா நாம்?இலையே திருமா லைப்போல்
கொண்டிடுநல் ஆழிவளை இலையென் றாலும்
கொள்ளுதமிழ் இரண்டனுக்கும் நேரே அன்றோ?
எண்டிசையும் அதிரத்தாய் இணைவாள் நம்மை!
இருகழலை நாம்பிடிக்கும் கதியே வீடு! (10)

நூற்பயன்

திருமகளின் தன்மைகொஞ்சம் விளங்கலாகும்
சீதனமாய் அவள்பார்வை தோன்றலாகும்
வருபவளின் தோற்றந்தான் தெரியலாகும்
வசந்தமெனும் சிறுதென்றல் வருடலாகும்!
கரங்குவிக்கும் பக்தித்தேன் கசியலாகும்
கவிதைக்குள் சுவைபார்த்தல் எளியதாகும்
இருகவிஞர் சேர்ந்திசைத்த திருப்பத்தாலே
இருப்புநிலை திருப்பமுறும் உண்மை தானே!!

-விவேக்பாரதி & சுந்தரராசன்
13.09.2020

Comments

Popular Posts