நியூயார்க் பை நைட்


அமெரிக்காவின் இரவு வாழ்க்கையை நியூயார்க்கில் ரசிக்க வேண்டும். வான் முட்ட வளர்ந்து நிற்கும் கட்டடங்களையும், பரபரப்பான மனிதர்களையும் பார்ப்பதே புதுப் பரவசம். 

நியூ ஜெர்சி வழியாகக் காரில் நியூயார்க்கிற்குப் பயணித்தால், வழியில் ஹட்சன் நதி வரவேற்கிறது. அதன் கரையோரம் சிறிது நடந்து சென்றபடியே எதிரில் ஒருபுறம் Empire state மாளிகை, மற்றொருபுரம் Freedom tower இரண்டும் ஒளியூட்டப்பட்டுக் கவர்ந்திழுக்கக் கண்டோம்.

2001-ல் இரட்டைக் கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அவற்றை முழுவதும் இடித்துவிட்டுக் கட்டியிருப்பதே Freedom tower. அதைப் பற்றிச் சொல்ல அங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அப்படியே Up town, Mid town, Down town என்று நியூயார்க் நகரின் கீழ, மேல வீதிகளில் உலாவந்து இரவைக் களி(ழி)த்தோம். 

எங்கள் பாரதி யார்? நாடகக் குழுவைக், கவிமாமணி இலந்தை சு இராமசாமி அவர்களின் மகள் கவிதாவும், அவரது கணவர் பாலாஜியும் அழைத்துச் சென்றனர். அவர்கள் வீட்டில் பரிமாறப்பட்ட மெக்சிகன், இத்தாலியன், வட இந்திய உணவுகளின் சங்கமத்தை வயிறு புடைக்க வெட்டிவிட்டு, கழுத்தளவுச் சாப்பாட்டுடன் இரவுலாவுக்குப் புறப்பட்டோம்.

இரவு 2 மணிக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன மான்ஹாட்டனின் தெருக்கள். அதிலும் குறிப்பாக Time Square-ன் பெருந்திரைகளையும், அதில் ஒளிபரபப்படும் விளம்பரங்களையும் காண, ஆயிரக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். 

நியூயார்க்கின் சாலை முழுக்க இசையும், போதையும், களிப்பும், காதலும், பாட்டும், கூத்தும், திண்பண்டங்களும் விலையுயர்ந்த கடைகளும் இரைந்து கிடக்கின்றன. இந்த உலாவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நேஷனல் பிராட்காஸ்டிங் சேனலையும் கண்டோம். 

ஏற்கனவே ஒருமுறை பகலில் இம்மாநகரைச் சுற்றியிருந்தாலும், இரவில் சுற்றுவது தனி அனுபவமாய் இருந்தது. சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நியூயார்க்கில் Hop on hop off எனப்படும் தனியார் சுற்றுலாப் பேருந்துகள், பயணத்தை எளிமையாக்குகின்றன. 

டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனத்தின் டபுள் டக்கர் பேருந்துகளில் ஏறி அமர்ந்தால் போதும், நியூயார்க் நகர் முழுக்க வலம்வந்து இடங்களைச் சுற்றிக் காட்டிவிடுவார்கள். இடையில் நாம் பார்க்க நினைக்கும் இடங்களில் இறங்கிக் கொண்டு, புகைப்பட சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொண்டு அதே நிறுவனத்தின் வேறொரு பேருந்தில் ஏறிக் கொள்ளலாம்.. 

அதிலும், உள்ளே நுழைந்ததும் அவர்கள் கையில் தரும் ஹெட்போன் மிக உதவிகரமானது. பேருந்து இருக்கைகளுக்கு அருகில் கொடுக்கப்பட்ட இடத்தில் அதைச் செருகிக் கொண்டால், நியூயார்க்கிற்கு வரவேற்கும் நல்ல ஆங்கிலப் பாடல்களும், இடையில் “நாம் வலதுபுறம் பார்ப்பது....” என்பதுபோல் தொடங்கி, அந்தந்த வரலாற்றை ரத்தினச் சுருக்கமாய் ஆங்கிலத்தில் சொல்லிவிடுகிறார்கள். இடங்களை அறிந்துகொள்ளவும், இறங்கிச் செல்லவும் அது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. 

சிலிர்ப்பூட்டும் வண்ணக் களஞ்சியமாய் விளக்குகளும், கூட களிப்பூட்டும் மக்களின் உற்சாகமும், சலிப்பூட்டும் நடையும் கலந்த சங்கமமாய் அமைகிறது நியூயார்க் உலா. 

நேற்றிரவு நியூயார்க் பை நைட் போனபோது தோன்றிய கவிதை

ஹட்சன் நதியதன் தீரத்திலே நின்று 
அமெரிக்காவின் எழில் பார்த்துவந்தேன் 
கட்டடத் தோட்டத்துப் பூக்களின் வண்ணங்கள்
கண்களில் பூத்திட மெய்மறந்தேன்!

ஊடுருவிச் சென்ற மென்குளிரில் சிலர் 
உற்சாகம் துள்ளிடப் பாடுவதும் 
ஆடுவதும் சிலர் ஓடுவதும் பலர் 
ஆனந்தமாக நடப்பதுவும்

இன்பத்தை வேண்டி இறங்கியபின் வெறும் 
இரவு தடுப்பதோ என்றபடி 
நன்பகல் போல விறுவிறுப்பாய்ச் சுற்றி 
நாலாபுறம் மக்கள் பாய்வதுவும்

உண்ணப் பலப்பல வைத்திருக்கும் சுவை 
ஊர்திகளும் கடைச் சாதிகளும் 
எண்ணாப் பொருட்களும் இங்கு கிடைத்திடும் 
என்று பொலியும் விளம்பரமும்

வானத்தை நோக்கி வளர்ந்தபின்னும் இன்னும் 
வான்முட்டும் ஆசையில் கட்டடங்கள் 
தானும்தன் ஒற்றை விரலுயர்த்திப் பெரும் 
தவமென நின்று நிலைப்பதுவும் 

தூக்கமிலாமலே மக்களெல்லாம் மிகச்
சுறுசுறுப்பாக இருப்பதுவும் 
பார்க்கும் இடமெங்கும் வண்ண விளக்குகள் 
பட்டுத் தெறித்துப் பரப்புவதும் 

தெள்ளத் தெளிந்த முகிலலையும் வானச் 
சித்திரமும் கலை அற்புதமும் 
உள்ளத்தில் வைத்து நினைத்துச் சுவைத்திட 
ஒற்றை இரவினில் கண்டுவந்தேன்

அமெரிக்க மண்ணின் இயற்கையையும் மக்கள் 
ஆதார மான ஒழுக்கத்தையும் 
நிமிர்ந்து ரசித்துத் தெளிவடைந்தேன்! இந்த 
நேர்மை நமக்குற வேண்டுவனே!! 

-விவேக்பாரதி 
17.09.2024
04.40 PM

Comments

Popular Posts