மாயமாய்ப் போன மணி நேரம்


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் இருந்து, நியூ ஜெர்சி வந்திருக்கிறேன். எங்கள் பயணத் திட்டத்தின் அடுத்த சில நாடகங்கள், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் நிகழவிருக்கிறது. 

ஹூஸ்டன் நகரின் ஹாபி விமான நிலையத்திலிருந்து, சிக்காகோ வழியாக பிலடெல்பியா வந்தடைந்தோம். அங்கிருந்து சில மணித்துளிகள் பயணித்து, நியூ ஜெர்சியில், எங்கள் நாடகத்தில் நடிப்பவர் ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்தோம். 

இதில், ஒரு விசித்திரம் என்னவென்றால், வட அமெரிக்காவின் தெற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சிறு பயணத்தில், ஒரு மணி நேரத்தைத் தொலைத்தேவிட்டோம்.  

விழிக்க வேண்டாம். விளக்குகிறேன்! ஹூஸ்டன் நகரில் இருந்து மதியம் 2 மணி அளவில் விமானம் ஏறி, 5 மணி நேரம் பயணித்து, பிலடெல்பியாவுக்கு இரவு 8 மணிக்கு வந்து சேர்ந்தோம். கணக்குப் போட்டுப் பாருங்கள்! இடையில் காணாமல் போன அந்த ஒரு மணி நேரம்தான் மாயமாய் நழுவியது. 
நேர வித்யாசங்களுக்கிடையே கூத்தாடும் இந்தப் பரவசம் ஒருபுறம் இருக்க, மாலைச் செவ்வானை விமானத்திலிருந்து சுகிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதை இப்படிக் கொண்டாடினேன். 

சிவந்த செந்தூரத்தை யார்தான் 
சிதறவிட்டார் வானில்? 
சிரித்துக் கிடந்த வானப்பெண் ஏன் 
சிவந்தாள் புது நாணில்
கவிதையை வானில் சிவப்பு மையால்
கணக்காய் எழுதுவதார்
கண்முன் மிதக்கும் பாலை வனமாய்க்
கவிந்தது ஏன் வானம்? 

வானில் வருமிக் கவிஞனனை வாழ்த்தி
விரித்த கம்பளமா? 
வண்ணத் தமிழ்ப்பணி செய்வதனாலே
வருகிற சம்பளமா? 
தேனை வானில் மெழுகிய தரையின் 
தரிசன அற்புதமா 
தேடாமல் நான் திகைத்த காட்சி
தெய்வச் சொப்பனமா 

காணும் வானம் முருகிச் சிவந்து
கருத்துப் போனதுவும்
காலம் நேரம் அதற்குள்ளாக
கலந்து குழம்பியதும் 
நாணும் வானம் தாய்மடி ஆகி 
நலமாய்த் தாங்குவதும்
ஞானாகாசம் இதுவா எனநான் 
நயந்து நோக்குவதும் 

வேண்டுதல் போலச் சிவந்தது வானம் 
வெம்மையினாலில்லை
வேகச் சூடு தணிந்த அன்பின் 
மென்மையினால் என்பேன்
நீண்டதுபோலத் தெரியும் வான் என் 
நெஞ்சில் ஏறியது- நான் 
நின்றால் என்னுடம்பெல்லாம் வானம்  
நித்தியம் ஆகியது!! 

-விவேக்பாரதி
03.09.2024
07.04 PM

Comments

Popular Posts