காரைக்கால் அம்மை கவி


காரிகையார் பாட்டில் கசிந்துருகி அன்னார்க்கு
யாரிறையான் என்ப தறிந்தேன் - நேரடியாய் 
நெஞ்சுதைக்கும் வெண்பா நிறைந்தவந் தாதியினில்
கொஞ்சுதமிழ் கற்றேன் குதித்து! 

குதிக்கின்ற சொற்கள் கவித்துவம் சந்தம்
பதிக்கின்ற நல்லிறைவ பக்தி - மதிக்குற்ற 
ஆன்மீக ஆழம் அருளுகிற அந்தாதி
தேன்மீறும் தெய்வத் தமிழ்! 

தமிழ்நாட்டோர் எல்லாம் தலைநிமிரப், பக்தி
கமழ்வீட்டார் எல்லாம் களிக்க - அமிழ்தாட்டி 
மாங்கனியாய்க் காரைக்கால் மாதா கொடுத்தகவி
தீங்கனியாய்த் தித்திக்கும் தீ! 

தீவிழியான் பாதம் தினமேத்தி அந்தாதி
ஓவியமாய் தந்த ஒளித்தமிழைச் - சேவித்தேன் 
காரைக்கால் அம்மை கவிபற்றிச் சைவபக்திச்
நீரிற்கால் வைத்தேன் நினைந்து! 

நினைந்துருகிப் பாட நிதம்கரைந்து தோய 
மனந்திருந்தி வாழ மருந்தாய்க் - கனிந்தருந்த
அற்புத அந்தாதி அன்புண்டு! மெய்யிறையின்
பொற்பதம் போற்றிப் புக!! 

-விவேக்பாரதி
27.12.2023
காலை 07.10

Comments

Popular Posts