மிச்சாங்கில் மீட்ட கவிதை


சென்னையைத் தாக்கிய மிச்சாங் புயல் எனக்கு என்னவோ காலில் ஏற்கனவே நோவு இருந்தவனுக்கு ஊசி குத்தியதுபோல்தான் கடந்தது. புயலைக் காட்டிலும் அகச்சீற்றம் உடலிலும் உள்ளத்திலும் இருந்ததால், முழு புயலை, முழு நித்திரையில் கழித்து விழித்தேன். புயலுக்கு முன் இரு நாட்கள் தூங்காமல் வேலை செய்ய வேண்டியதானது. அந்தக் களைப்பும் பாரமேற்றிக்கொள்ள, புயலோடும் உறக்கத்தோடும் போராடி இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்ற துணிச்சல் பயணத்தில், இந்தக் கவிதையை முணுமுணுத்தபடி சென்றேன். எதிர்க்காற்றில் தூங்கி விழுந்துவிடாமல் மீட்ட கவிதை இதோ! 

வானத்தையே பூமிமேல அமுக்கப் பார்க்குது - காத்து 
வாடான்னு ஏறிவந்து தள்ளப் பார்க்குது
வங்ககடலு சென்னைக்குள்ள நொழைய பார்க்குது - போற 
வழியிலெல்லாம் சேத்துத்தண்ணி இழுக்கப் பார்க்குது
ஆனமட்டும் தண்ணிவந்து நெறைக்க பார்க்குது - மேகம் 
ஆரவாரம் காட்டாம அடிச்சு ஊத்துது
அத்தனைக்கும் மத்தியில பாட்டு கேக்குது - ச்சே 
யார்சமைக்கும் வாசனையோ கவித பூக்குது! 

பொயலு தாயி பொயலு - இது 
பொறட்டிப் போடும் பொயலு - ஒன் 
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு! 

ஊசிகுத்தும் சாரல்மழ கிழிக்கப் பார்க்குது - மக்க
உசுருக்குள்ளும் ஊடுருவி எடத்த கேட்குது
ஒன்னுமில்லா எடத்தில்கூட தண்ணி தேங்குது - முன்ன 
ஊருமொத்தம் குடிச்சதப்போல் குடிக்கப் பார்க்குது
வீசுங்காத்து தெசயமாத்தி விசிறி அடிக்குது - என்ன 
வேதனையோ மேகமெல்லாம் அழுது தீர்க்குது 
வெரட்டிப்போகும் நேரத்திலும் பாட்டு கேக்குது - அந்த
வெஷமக்காரி கொரலுகேட்டு கவித பூக்குது! 

பொயலு தாயி பொயலு - இது 
பொறட்டிப் போடும் பொயலு - ஒன் 
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு! 

கார்கொழல சிலுப்புரியோ சூறக்காத்துல - நீ 
கால்வலிக்க ஆடுறியோ மேகக்கூத்துல
கண்ணக்கண்ண உருட்டுரியோ இடியுந் தாக்கிட - என்ன 
காரணமோ இந்தப்புயல் பகைய தீர்த்திட 
ஊர்முழுக்க வெள்ளமடி மனசு தணியணும் - இந்த 
உசுருவாழ கொஞ்சமாக தணிஞ்சு பொழியணும்
ஒனக்குப்பேரு மாரியம்மா நெனப்பில் இருக்கணும் - ரொம்ப 
ஓங்கிடாம சாந்தமாக வெளுத்து வெலகணும்! 

பொயலு தாயி பொயலு - இது 
பொறட்டிப் போடும் பொயலு - ஒன் 
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!!

-விவேக்பாரதி
04.12.2023
காலை 09.32

Comments

Popular Posts