மதுரை மீனாஷி அம்மை பதிகம்


மதுரை மீனாட்சி மீது கவிஞர்கள் சேர்ந்து பதிகம் எழுதிய முயற்சியில், மஸ்கெட் திருக்குறள் பாசறையின் நிறுவனர், அன்பு மிக்க கவிஞர் சுரேஜமீ கட்டளையிட, வேண்டுதலும், விளம்புதலும், வாக்குமூலமும், வழிபாடும் பதிகமாய் மலர்ந்தது. எனக்கு முன் 3 கவிஞர்கள் 30 பாடல்களைப் பாடியிருக்க, நான் பாடும் 31-40 பாடல்கள்...

கற்றதும் ஒன்றிலை பெற்றதும் ஒன்றிலை 
காலமே தருவ தென்னும் 
கனிவுடை அனுபவம் இதுவரை பெறவிலை
கடவுள்மேல் பக்தி என்றே
சுற்றியும் ஆலயம் சூழ்வலம் வந்துநான் 
தொட்டதாய் நினைவுமில்லை
சுமந்தவர் வழியிலோ கொடுத்தவர் வழியிலோ 
சொந்தமாய் வரவும் இல்லை!
உற்றதும் எப்படி ஒருவரி அறிவிலை! 
உள்ளுறும் கவிதை வெள்ளம் 
ஊறுதல், மீறுதல், பாயுதல், யாவும்நீ 
உதவினாய் என்று கண்டேன்!
பொற்புடை உன்புகழ் பாடுதல் ஒன்றையே 
பொழுதெலாம் செய்யுகின்றேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (1)

தென்றலாய் வருகிறாய் சன்னமாய்த் தொடுகிறாய்த்
தெம்பினை அருளுகின்றாய் 
தேறினால் ஆங்கொரு பாடலாய் நெஞ்சினில் 
தேனேன ஊறுகின்றாய்
நன்றியாய் வருகிறாய் நானழும் போதினில்! 
நண்பராய் பகைவ ராயும் 
நடுங்கிடும் கைகளைப் பற்றிடும் ஒருகரம் 
நல்கிநீ நீங்குகின்றாய்!
ஒன்றெனச் சொல்கிறார் உன்னுரு கோடியா? 
உண்மையில் கோடி கோடி
உள்ளதாய்ச் சொல்லிடும் எண்களைத் தாண்டியும் 
இன்னுமோர் கோடி கோடி
புன்னகை செய்கிறாய் நகையதா வாழ்க்கையின் 
புண்ணியக் காட்சி அன்றோ! 
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (2)

ஓடுவேன் ஓயுவேன் ஓயுவேன் ஓடுவேன் 
உழைப்பினில் மாற்றமில்லை!
உதவுவேன் உயருவார் உதவுவார் உயருவேன் 
உலகினில் வாட்டமில்லை!
பாடுவேன் ஆடுவார் ஆடுவேன் பாடுவார்
பாடலும் முடிவதில்லை!
பழகுவார் நீங்குவேன் நீங்குவார் பழங்குவேன்
பாடமும் அறியவில்லை!
சாடுவேன் கொஞ்சுவார் கொஞ்சுவேன் சாடுவார்
சரித்திரம் திரும்பவில்லை!
சரியுவேன் உயருவேன் உயருவேன் சரியுவேன் 
சற்றும்நான் சளைக்கவில்லை!
போடுமிந் நாடகத் தியக்குநர் நீயெனும் 
பூடகம் மறக்கவில்லை! 
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (3)

வாக்கினில் நிற்பது நீயெனும் உண்மையை 
வழியிலே கற்றுக் கொண்டேன்!
வழியிலே கற்பினும் வாழ்க்கையே அதுவெனும் 
வாய்மையை எட்டிவிட்டேன்! 
நீக்கவோ அழிக்கவோ ஒருசொலும் மொழிந்திடா
நிறைவினை வேண்டி நிற்பேன்!
நிச்சயம் என்கிற மந்திரச் சொல்லையே
நித்தமும் கேட்டிருப்பேன்!
தாக்கினால் தாக்குதல் மிருகமும் மனிதனும்
தன்னுடன் கொண்ட தர்மம் 
தாக்குறும் காற்றுபின் தாக்குமோ அந்நிலை
தன்னையே வேண்டும் நெஞ்சம்!
பூக்கவும் காய்க்கவும் மட்டுமே அறிந்திடும்
பூமர வாழ்க்கை அருள்வாய்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (4)

ஆத்திரக் காரர்தம் கைகளில் கத்தியாய்
ஆகவும் விரும்ப மாட்டேன்! 
அவசரக் காரர்கள் கைவரும் பணமென 
அழியவும் விரும்ப மாட்டேன்! 
சாத்திரம் பேசுவார் சறுக்கிடும் பழமையாம் 
தர்க்கமும் விரும்ப மாட்டேன்!
தத்துவம் என்றதும் ஐயுறா தேற்றிடும் 
தன்மையும் விரும்ப மாட்டேன்! 
தோத்திரம் பாடியே குழிபறிப் பாரவர் 
தொடர்பினை விரும்ப மாட்டேன்!
தோன்றிடும் உண்மையை மறைத்தே எதிர்ப்பவர் 
தோழமை விரும்ப மாட்டேன்! 
பூத்திருக் கின்றவுன் பொன்முகம் பார்த்திடும் 
பூவென வாழ்க்கை கேட்பேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (5) 

பழக்கமும் வழக்கமும் படுத்திய பாட்டினில் 
பலதினம் கெட்டதுண்டு!
பாதைகள் மாறிடும் போதையில் வீழ்ந்துநான் 
பாவியாய்ப் பட்டதுண்டு!
உழைப்பினை வெறுத்திடும் சோம்பலின் கைகளில் 
உருண்டுநான் வீழ்ந்துண்டு! 
உறுதியே தோன்றிடாச் சிந்தனைக் குப்பையை 
உண்டுநான் வாழ்ந்ததுண்டு!
அழுத்தமும் வருத்தமும் எனக்குதான் பெரிதென 
அழுதநாள் கோடியுண்டு!
அறிவிலே விடுதலை அடைவதை அறிந்திடா 
ஆழிருள் நாட்களுண்டு!
புழுங்கிய இவற்றைநீ பூவென ஊதினாய் 
புதியனாய் ஆனேன் அம்மா!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (6)

பசியிலே மற்றவர் வாடிடும் போதுநான் 
பகிர்ந்திட உணவு தருவாய்!
பாழ்படும் சோம்பலில் வீழ்ந்திடா தெனக்குநின் 
பக்குவக் கீதை தருவாய்!
நிசியிலே விழிக்கிறேன் பகலிலே உறங்குவேன்
நிலைத்திடும் ஒழுக்கம் தருவாய்
நிம்மதி என்கிற செல்வமே வேண்டுவேன் 
நிழலெனும் கோயில் தருவாய்
அசைத்திடும் போக்கினில் உடலமும் உள்ளமும் 
அசைந்திடும் வலிமை தருவாய்
ஆடிடத் திறமையும் ஆடிடாப் பொறுமையும் 
அவசியம் அறிந்து தருவாய்
புசித்திடும் உணவுநின் புகழ்தரும் நாமமே
பூசையே சுவாசம் என்பேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (7)

அறத்தினை மட்டுமே நாடிடும் பாதைகள், 
அன்பையே செய்யும் நெஞ்சம்,
அறிவினை மட்டுமே கேட்டிடும் ஆசைகள், 
அணைப்பையே கொடுக்கும் பண்பு,
மறத்தினை பொறுமையில் பார்த்திடும் சிந்தனை,
மறதியின் அரிய செல்வம், 
மக்களில் மக்களாய் வாழ்ந்திடும் பேற்றுடன்
மரஞ்செடி கொடியில் காதல்,
சிறப்பினை செயலினில் கண்டுபா ராட்டுதல்,
செய்கையின் நேர்த்தி காணல்,
தீர்ந்திடாப் பொழுதினைத் திட்டமிட் டாண்டிடும்
திறமையாம் அரிய யுக்தி,
புறத்திலும் அகத்திலும் மண்மணம், இத்துடன் 
பூரண அருளும் தாராய், 
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (8)

உன்னருள் பாக்கியம் உன்னடி சௌக்கியம் 
உன்புகழ் உச்ச வேதம் 
உன்மொழி சத்தியம் உன்னுரு நித்தியம் 
உள்ளமே உன்றன் கோயில் 
உன்வழி அன்பினில் உன்சுகம் பாட்டினில் 
உன்னொளி அறிவின் ஏட்டில் 
உன்னில்நான் ஒருதுளி உன்றனைச் சேருதல் 
உன்னைநீ கொஞ்சும் காதல்!
என்னிருள் உனக்கொரு சிறுதுளி நீவர 
இசைந்திடில் வரும் வெளிச்சம்
எனக்குநீ உனக்குநான் என்பதை அறிந்தபின் 
இன்னுமேன் என்னுள் அச்சம்
புன்மையும் வன்மையும் மென்மையாய் நீக்கிடும் 
புன்னகை மட்டும் போதும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (9)

எத்தனை பாடிநான் எத்தனை எழுதினும் 
எஞ்சிடும் அழகின் அழகே! 
ஏகனைக் காதலால் மோகனம் செய்திடும் 
எழிலியே அரசர்க் கரசே! 
சித்தரும் பித்தரும் தேவரும் இறைவரும்
சிந்தனை செய்யும் வரமே! 
சின்னவன் என்னையும் மென்மலர்த் திருவிழி 
சிமிட்டியே நோக்கும் தயவே! 
அத்தரும் குங்கும அமிழ்தமும் வீசிட 
அடிகள்வைத் தாடும் ஒயிலே! 
ஆனையும் அழகனும் அடுத்தபல் மக்களும் 
அன்னையென் றடையும் நிழலே! 
புத்தரும் பானநின் பதமலர்த் தாமரை 
பூமிவைத் தாளும் அருளே! 
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் 
பூங்கயற் கண்ணி தாயே! (10) 

-விவேக்பாரதி
08.11.2023
அதிகாலை 03.30

Comments

Popular Posts