பாடலாகப் பாடுகிறேன்


சத்தமாகப் பாடுகிறேன் கடல் அலைக்காக - கொஞ்சம்
சன்னமாகப் பாடுகிறேன் தென்றலுக்காக 
பித்தனாகப் பாடுகிறேன் என் மொழிக்காக - அதை 
பிரியத்தோடு பாடுகிறேன் மக்களுக்காக 

மௌனமாகப் பாடுகிறேன் நிம்மதிக்காக - எனை 
முழுமையாகப் பாடுகிறேன் சந்நிதிக்காக 
தியானமாக பாடுகிறேன் தெய்வத்துக்காக - அதில்
தெளிவுகண்டு பாடுகிறேன் நம்மவர்க்காக 

சொன்னதெலாம் பாடுகிறேன் முன்னவர்க்காக - அதில்
சொந்தமாகப் பாடுகிறேன் பின்னவர்க்காக 
அன்னையன்பைப் பாடுகிறேன் பெற்றதற்காக - ஊரில்
அப்பனறிவைப் பாடுகிறேன் பாடத்திற்காக 

எனையிழைத்துப் பாடுகிறேன் அன்பருக்காக - நாளும்
எனைமறந்து பாடுகிறேன் பாடலுக்காக 
மனம்நெகிழ்ந்து பாடுகிறேன் உலகத்துக்காக - எதையும்
மகிழ்ந்தபடி பாடுகிறேன் காதலுக்காக 

உயிர்கசிந்து பாடுகிறேன் ஏழையர்க்காக - பொங்கும்
உணர்ச்சியோடு பாடுகிறேன் வீரருக்காக 
வியர்வையோடு பாடுகிறேன் உழைப்பவர்க்காக - எய்தும்
வெற்றிக்காக பாடுகிறேன் தேசத்துக்காக 

ஊன்றிநின்று பாடுகிறேன் கலைகளுக்காக - அதன்
உண்மைகளைப் பாடுகிறேன் வேதத்துக்காக 
தோன்றுவதைப் பாடுகிறேன் நம்பிக்கைக்காக - நாள்
தோறுமொன்றைப் பாடுகிறேன் பிறந்ததற்காக

பாடலன்றி மூச்சுவிடும் காரணமென்ன? - என் 
பாடலன்றி நானிருக்கக் காரியமென்ன? 
தேடலது தீரும்வரை பாடி வைக்கிறேன் - அது
தெரிந்துவிட்டால் நானுமொரு பாடலாகிறேன்!! 

-விவேக்பாரதி
02.11.2023
நள்ளிரவு 03.15

Comments

Popular Posts