துணைக்காலிழந்த மாடப்புறா


ஒரு புறாவின் குனுகுனுப்புடன்
சேர்ந்தொலிக்கிறது என் இதயம்
அதன் ரெக்கைப் படபடப்பின்
தொனி இருந்ததும்
இதே இதயத்தில்தான்…
இன்றேனோ குனுகுனுப்பாய்க்
குறுகிப்போய்விட்டது!

மாடமே என்றாலும்
அதிலொரு மூலையைக் கண்டமர்கிறது!
கோபுரத்தில் கூட
இருள் படிந்த இடுக்கொன்றில்
ஒட்டிக் கொள்கிறது!
சிலிர்த்திருந்த அதன் ரோமமெங்கும்
இன்று வௌவால் வீச்சம்!

சிரித்திருக்கும் புறாவின் மறுமுகத்தில்
கசியும் கண்ணீர்த் துளியைக் காண வேண்டுமா?
ஒரு பிடி புரிதலை
உங்கள் காலருகே தூவிவிட்டுக் காத்திருங்கள்
ஈரம் தேயத்தேய நடந்து வந்து
நம்பிக் கொத்தித் தின்னும்
துணைக்கால் இழந்த
மாடப்புறா!!

-விவேக்பாரதி
14.09.2023
இரவு 12.32 

Comments

Popular Posts