குறட்டைச் சுப்ரபாதம்


ஜன்னல் வழி கசியும்
சின்ன விடியல்களால்
அலுத்துப் போய்விட்டேன்
ஒரு மேக வெடிப்பான
விடியலுக்குப்
புன்னகைப்பாயா?

இரவின் நீண்ட நா விழுங்கிச்
சுருட்டிக் கொண்டதில்
கொஞ்சமாய் இரைக்கிறது மூச்சு
உன் சூலாயுதம்
இந்தப் பாம்பைக் கிழித்து
என்னைப் பிரசவிக்குமா?

நீர்க்க நீர்க்க கனவுகண்டு
வேர்த்துப் போய்விட்டேன்
அடைமழையாய் மொத்தக் கனவோ
அடர் முகிலாய் கனவில்லா இரவோ
சூழக் கிடைக்காதா?

ஏன் என்னை எழுப்ப
கை உயர்த்துகிறாய்
எனை எழுப்ப நீ
எழுந்திருக்கும்போதே
நான் தூங்குவதுபோல்
நடிக்கத் தொடங்கிவிட்டேன்!

இரவு காலை மயக்கங்களில்
உன் குறட்டைப் பல்லவியின்
பூபாளமே
எனக்கு நித்திய சுப்ரபாதம்!!

விவேக்பாரதி
22.09.2023
காலை 06.45

Comments

Popular Posts