காளி திருப்பள்ளியெழுச்சி


(அலுவலக பணிக்கு நடுவே சட்டெனப் பிறந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்)

இரவு வெளுத்தது கீழ்த்திசை தன்னில்
இரவி எழுந்து சிரிக்குது விண்ணில்
வரவு நினைத்தெம தன்பர்கள் வீட்டின்
வாசல் நிறைக்குது காதலின் கோலம்
விரைவு புனைந்தெமை அன்புடன் காக்க
வேகம் எடுத்திடு எந்துயர் போக்க
நரவு தவழ்குழல் காளியெந் தாயே
நாங்கள் இசைத்திட எழுந்தருள்வாயே!

கல்வி அடைந்திடும் கனவினில் பாலர்
கடமை புரிந்திடும் நினைப்புடன் மாந்தர்
செல்வம் விழைந்து துடிப்பினில் வாழ்க்கை
சென்மம் நிறைந்தது பூமியின் பாதை
சொல்வி ளையாட்டில் துயில்வது நன்றோ
சோதனை இன்னும் தொடர்வதும் உண்டோ
செல்வி திருமுக விழி மலர்வாயே
சேர்த்தெம் சோம்பலை நீக்கிடுந்தாயே!

பழகிய பழங்கதை கேட்டுச் சலித்தோம்
பழம்பொருள் ஓதி வாழ்ந்து முடித்தோம்
அழகிய புதுப்பொருள் அறிவு திறக்க
ஆதியே நின்னருட் சேதி விழைந்தோம்
விழுமிய ஒளியுடன் விடிந்தது காலை
வெற்றியென்றே குரல் எழுப்பின சேவல்
முழுவதும் உயிரொளி பரப்பிடுந் தாயே
மூலமே நீ பள்ளி எழுந்தருள்வாயே!

போதம் அளித்தெமைப் புதியவராக்கு
புத்தி கொடுத்தெமை வித்தகராக்கு
நீதி கொடுத்தெமைத் திண்ணமுறச்செய்
நிதியும் அளித்துநின் நிழலில் உறச்செய்
வேதம் எனும்புது மந்திரப் பாட்டில்
வேண்டித் துதிக்கிறோம் வேந்தனின் ராணி
காதலிலே உனைக் கோரினம் காளி
காலமே எம்மைக் காத்தருள் காளி!!

-விவேக்பாரதி
19.06.2023
காலை 04.25 

Comments

Popular Posts