அம்பை


ஜென்மத்தின் பயன்செய்ய எனைப் படைத்து
    சேர்கின்ற பல்லறிவும் திறமும் தந்து
வன்மத்தில் கர்வத்தில் சோர்வில் நெஞ்சம்
    வழுக்கிவிழும் நேரத்தில் கைக் கொடுத்து
உன்மத்தம் உண்டாக நெஞ்சணைத்து
    உயிருக்குள் அமுதமழை பெய்து,என் கண்ணீர்
கன்னத்தைக் கழுவ,உடல் தூய்மையாகக் 
    காயத்தைச் சரிசெய்து காத்தாள் அம்பை! 

பலபோதில் பலதோற்றம் புனைவாள், இன்று
    பாசத்தால் தோழியென நின்றாள், நேரம்
சிலபோதே ஆனாலும் கருவறைக்குள்
    சென்றுதிரும் பியதைப்போல் அமைதி கண்டேன்! 
உலகத்துக் கனமெல்லாம் அறுந்து வீழ 
    உயிர்கொண்ட சிறகுகளைத் தூசு தட்டிக்
கலகத்துச் சேற்றினிலே புதைந்த என்னைக்
    கதகதப்புச் சொல்லாலே மீட்டாள் அம்பை! 

பிள்ளைமொழிப் பிதற்றல்கள் கேட்டாள், என்றன்
    பெரியதவ றத்தனையும் கேட்டாள், உள்ளில்
கள்ளுதரும் தமிழ்க்கவிதை கேட்டாள், அங்கே
    கன்றுகண்ட பரவசங்கள் கேட்டாள், என்றன்
உள்ளிருக்கும் பசிச்சத்தம் கேட்டாள், சோற்றைப்
    பரிசளித்தே இன்னுமெனக் கேட்டாள், நேர
முள்ளைவிட வேகமுறும் உலகில், பிள்ளை 
    முனகியதும் புலம்பியதும் கேட்டாள் அம்பை! 

கண்ணுக்குள் பழையவொளி பார்த்தாள், கொண்ட 
    காயத்தில் புதியபளு பார்த்தாள், சொல்லும்
உண்மைக்குள் உயிர்ச்சுகத்தைப் பார்த்தாள், என்றன் 
    உளறலிலும் மானுடத்தைப் பார்த்தாள், இந்த 
மண்ணுக்குள் என்னோட்டம் பார்த்தாள், ஆனால்
    மனத்துக்குள் என்தேக்கம் பார்த்தாள், நெஞ்சப்
புண்ணுக்குத் தீர்வொன்றைப் பார்த்தாள், அங்கே
    பூவைக்கும் வழிசொல்லிப் பார்த்தாள் அம்பை! 

கரம்பிடித்தாள், என்சாலை சுகம் என்றாச்சு,
    கண்பார்த்தாள், என்வானம் வெளிச்சம் ஆச்சு,
சுரமிசைத்தாள், என்சத்தம் மௌனம் ஆச்சு,
    சலசலத்தாள், என்குழப்பம் தெளிந்து போச்சு,
வரம்கொடுக்க எனைத்தேடி தெய்வம் வந்தாள்
    வார்த்தைக்குள் வழிபார்த்தே சிக்கல் தீர்த்தாள்
மரத்தடியில் சுயம்காக்கும் ஞானம் கற்றேன்!
    மனத்தடியில் நிழல்வளர்த்த அம்பை வாழ்க!! 

-விவேக்பாரதி
28-11-2022

Comments

Popular Posts