நான் துவள நீ நிமிர


பழையரணம் பழஞ்சிந்தை பழைய எண்ணம்
    பழையகுணம் எல்லாமும் என்மேல் ஏறி
முழுவதுமே எனைக்குப்பை ஆக்கும் போது
    முறுவலெனும் அலங்காரம் பூசிக் கொள்வேன்
உழைப்பெனும் நெருப்பாலென் குப்பையெல்லாம்
    உள்ளுக்குள் எரித்துவிட எண்ணுகின்றேன்
அழைப்பின்றி வருகின்ற சோர்வு மேகம்
    அலுப்புமழை பொழிகையில்தான் அழுகிறேன் நான்! 

உள்ளிருக்கும் என்னெருப்பு குன்றும் வேளை
    உருபெரிதாய் என்குப்பை தெரியும் நேரம் 
முள்ளிருக்கும் காலாக வலியில் விம்மி
    மூடிபோட்ட பாத்திரமாய்க் குமுறுகின்றேன்
கள்ளிருக்கும் புத்தகத்துள் எனை அழுத்தி,
    கவலுவதை நான்போக்க முனையும்போதும்
தள்ளுவது போல்தள்ளி மீண்டும் ஒட்டும்
    சத்தற்ற சோர்வாலே வாடுகின்றேன்! 

எப்போதும் பறப்பதற்கே எண்ணம் ஆனால்
    என்சிறகு மரக்கிளையை சேரச் சொல்லும்
எப்போதும் மிதந்திடவே ஆசை ஆனால்
    என்கண்கள் கரையோரம் தேடல் கொள்ளும்
எப்போதும் உழைத்திருக்க திட்டம் ஆனால்
    இடையினிலே வரும்சோர்வு கொல்லும்போது
இப்படியே போய்விடுமோ காலம் என்று 
    இதயத்தில் இடிகோடி இறக்குதம்மா! 

யானென்னை கொஞ்சமென அறிவேன் ஆனால்
    யாருக்காய் நானென்று தெரியவில்லை
வானிங்கு விரிந்தகதை தெரியும், மாரி
    வந்துவிழும் காரணந்தான் விளங்கவில்லை
மானிடனாய் பிறந்தபயன் தெரியாப் போதில்
    மாப்பெரிய மக்களிடம் கூடிப் பேசி
ஞானமுகவரி கேட்டு பயன்தான் என்ன?
    நான்துவள நீநிமிர்வாய் எழுதுகோலே!!

விவேக்பாரதி
27-11-2022

Comments

Popular Posts