கங்கை வழிப் பயணம்

கம்பன் விழாக் கவியரங்கம்
-புதுக்கோட்டை-


எப்போதும் எல்லாரும் இருப்பதைப்போல்
இயல்பான தனிப்பொழுதில் என்கைப்பேசி
தப்பாமல் அணைத்தபடி திரையைத் தொட்டு
தடவிக்கொண்டே சென்றேன் அந்த நேரம்
கப்பென்று திரைவந்தான் கம்பநாடன்
காணொலியொன் றிருக்கிறது பார்க்கிறாயா
இப்போது பார்த்திடலாம் இல்லாவிட்டால் 
இருப்புக்கு சேமிக்க வழியுண்டென்றான்

கல்வெட்டுத் தமிழ்கற்று, ஓலைக் கீற்றில்
காப்பியத்தை வடித்தபிரான் செல்போன் என்னும் 
வெல்வெட்டு திரைக்குள்ளும் வீடியோவாய்
வந்துவிட்ட நிலைகண்டேன் தொட்டுச் சென்றேன்
சொல்பட்டு நெய்திட்ட கலைஞன் அங்கு
சுவைப்பட்ட சிலவரியில் வணக்கம் சொல்லி
பெல்பட்டன் அழுத்திவிட்டு பார்க்கச் சொன்னான்
பிழையாமல் அப்படியே அதையும் செய்தேன்!

ராமனெனும் தன்நாதன் கடந்து சென்ற
ரசனைமிகு இடங்களையோர் டிராவலாகாய்
தேமதுரத் தமிழில்தான் படைத்ததாக
தெய்வீகக் கவிசொன்னான்! அவன்சொல் மூலம்
பூமியிலே புண்ணியமாம் அயோத்தி மற்றும்
புரள்நதியில் புண்ணியமாம் கங்கை ஆற்றை
நாமிணைந்து பார்த்திடலாம் ஹெட்செட் போட்டு
நல்லபடி ஆயத்தம் ஆகிக் கொள்க! 

(வேறு)

மக்களெலாம் மன்னர்களாய் வாழ்ந்த அயோத்தி - ஓர்
மாமன்னன் இறைவனாய் நின்ற அயோத்தி - மனத்
துக்கமிலை என்பதால் இன்பம் என்பதன் - உரு
தோற்றத்தின் வேறரியாப் பூமி அயோத்தி

தசரதனின் சொர்க்கபுரி அந்த அயோத்தி - ராமன் 
தர்மம்காக்க வந்துதித்த செல்வம் அயோத்தி - கவிதை
விசையுடைய சரயுநதி பாயும் அயோத்தி - கதை
விளையாடும் பொன்னிலமாம் புனித அயோத்தி! 

அங்கிருந்து, 

நல்ல முனிவன் துணைவனாக நாட்டை அகற்றான் - ராமன்
ஞானவேள்வி காப்பதற்குக் காடு புகுந்தான் - வைரக்
கல்லை ஒத்த மார்பினாளைக் கணையில் எரிந்தான் - பின்னர்
கல்நெகிழ்த்திப் பொன்மிதிலை நகரம் நுழைந்தான்! 

கல்விக்காக சென்றபயணம் தாடகா வனம் - அன்புக்
காதல் சேர சென்ற பயணம் மிதிலையின் நிலம் -  தந்தை 
சொல்ல அரசு சூடப் பயணம் சொந்த ஊருக்கு - அங்கு 
சூழ்ந்திருந்த திருப்பம் எல்லாம் தெரிந்த தாருக்கு?

அரசை ஏற்க வென்று சொன்ன அப்பன் மறுத்தான் - தம்பி 
ஆள்வதற்கு நல்லன் என்றே அம்மை உரைத்தாள் - கேட்டுத் 
தரும யுத்தம் நடத்தவில்லை தலைவன் பணிந்தான் - தன் 
தந்தை அன்னை சொன்ன சொல்லில் தர்மம் உணர்ந்தான்!

கேட்ட தம்பி வில்லெடுத்துக் கிளர்ந்து எழுந்தான் – கைக் 
கிடைத்த ஓற்றைத் தலைமை காக்க வில்லை எடுத்தான் - ஊரில் 
ஆட்களெல்லாம் சேதி கேட்டு அலறிக் கொதித்தார் - ஆனால்
அரசு சொத்தில் சேதம் இன்றி அழுது துடித்தார்!

அத்தனைக்கும் நடுவினில்தான் அண்ணல் நடந்தான் - அங்கு 
அண்ணன் திண்ணை ஆசை இன்றி தம்பி தொடர்ந்தான் – பின்னர்
இத்தனையும் கேட்ட சீதை இதயம் துடித்தாள் - ராமன் 
இருக்கும் இடமே தனக்கும் என்று இணைந்து தொடர்ந்தாள்!

(வேறு)

தேரினிலே ராமபிரான் இளவளுடன் 
சீதையுமாய் சேர்ந்து போக
ஊரினிலே உள்ளவர்கள் பின்னாலே 
வனம்நோக்கி உடன் நடக்க
பேரணியாய்ப் போனதடம் ஊழிவெள்ளம் 
எனக்கம்பன் பேசுகின்றான்
காரணமோ ராமன்மேல் பெருபக்தி 
பிரியானிக் காக இல்லை! 

துக்கமுடன் காட்டுக்கு ராமனின்தேர் 
சென்றவழி தொடர்ந்து சென்ற
மக்களெலாம் சோலையிலே தூங்குகையில் 
அவரறியா வள நேரத்தை
தக்ககணம் என்றெண்ணி கப்பலேறிப் 
போவதற்குத் தப்பிக்கின்றான்
இக்கதையை அண்மையிலும் செய்திகளில் 
கேட்டீரா? இல்லை இல்லை

நாடுபற்றி எரியுதென்ற நடுக்கத்தால் 
தப்பித்தல் நாடவில்லை
நாடுபற்றி அக்கறையில் ஊருக்குத் 
தேர்விடுத்து நடந்து சென்றான்
வீடுபற்று சொந்தங்கள் விலக்கியவன் 
தலைவனெனும் விதியின் நாதன்
மேடைபற்றி விளம்பரங்கள் செய்யாமல்
இயல்பாக மெலிதகன்றான்

(வேறு)

பரதன் நாட்டில் நுழைந்த நேரம்
பார்த்தால் மக்கள் கொதித்திருந்தார்
பஞ்சக் கொடுமை நிகழ்ந்தாற்போல
பதறிக் கதறித் தவித்திருந்தார் 
அரசை இவன்றான் ஏற்பானோ என
அகத்துக் குள்ளே துடித்திருந்தார்
அவனாய் ஏற்றால் அதிரடி செய்தே 
அதனை எதிர்க்க நினைத்திருந்தார் 

அரண்மனைக் குள்ளே புகுந்திடலாம் 
அபகரித் ததனை அடைந்திடலாம்
பரவிடும் புரட்சி நெருப்பினிலே 
பதவியும் விலக வைத்திடலாம் 

இப்படி எல்லாம் அந்த மக்கள் 
இதயம் நினைக்கக் கூடும் எனில் - அது 
இலங்கை அல்ல அயோத்தி என்றே 
இங்கிருப்பவர்கள் மறவாதீர்
தப்புகள் நேர்ந்த கதைகளைக் கேட்டுத்
தனலில் பரதன் மிகத்துடித்தான்
தலைவன் பதவிப் பரிந்துரை இருந்தும்
தருவனத்துக்குள் புக எழுந்தான்

மரவுரி தானும் ஏற்கின்றான் 
மன்னவன் சென்ற வழிநடந்தான்
சரிசரி அதனைப் பின்னாலே 
தருபவர் உள்ளார் நாம்சற்று

(வேறு)

கங்கைக் கரையினிலே - நம்
காகுத்தன் சென்றவிதம் 
இங்கு நினைத்திடுவோம் - ஆ 
என்னே இயற்கைவளம்! 

சூரியனின் ஒளியை - தன் 
சுடரொளியால் மறைத்தே 
ஆரியன் நடைநடந்தான் - அந்த 
அதிசயம் நினைவுளதா?

பொய்யிடையாள் சீதை - உடன் 
போந்து நடக்கிறவன் 
மெய்யவனாம் இளையோன் - ராமன் 
மேன்மை உரைப்பதெங்கே! 
மையோ மரகதமோ - கரு 

மழைமுகிலோ கடலோ
ஐயோ இவன்வடிவை - நாம் 
அளக்கும் வழியுமென்ன?

என்று கவியரசன் – சொல்லில் 
ஏற்றி நிறுத்துகிறான் 
சென்றவர் கங்கையிலே - அங்கு 
செம்மைநீர் ஆடுகிறார்

சடலம் மிதக்கவில்லை - கரையில் 
சாம்பல் சுவடுமில்லை 
உடலம் நனைத்தபிரான் - அருளால் 
உயர்ந்தது கங்கைநதி

முனிவரம் மூவரையும் - நல்ல 
முறையில் வரவேற்றே
இனிதின் உபசரித்தார் -  உண்மை
இறைவன் என அறிந்தார்! 

அப்பொழுது அங்குவந்தான் - ஓர் 
அற்புதத் தொண்டன்குகன் 
இப்பொழுது உள்ளவர்க்கே - நல் 
இலக்கணம் ஆனதொண்டன்!

(வேறு)

கூட்டம் கூடி நிற்பார் – கையில்
கொடி பிடித்திருப்பார்
ஆட்டம் செய்திருப்பார் - தலைமை 
ஆகக் காத்திருப்பார்

கோஷம் போட்டிருப்பார் - சிலபேர் 
கொள்கை பேசி நிற்பார் 
வேஷமிட்ட தலைவன் - காணும் 
வெற்றிக் கார்ப்பரிப்பார்

சாதிக்காக வருவார் - பலரும் 
சரக்குக்காக வருவார் 
மோதிக்கொண்டு திரிவார் - எதிலும் 
முன்னிருக்க முயல்வார் 

பேனர் போஸ்டர் கட்டவுட் - மீதில் 
பாலை ஊற்றித் தொழுவார்
ஏனெதற்குத் தெரியார் - ஆனால் 
ஏவல் செய்ய வளைவார்

குனிந்து வாழ்ந்திருப்பார் - தினமும்
கும்பிட்டே கிடப்பார்
மனிதர் என்பதைத்தான் - அவரும் 
வசதியாய் மறப்பார்

(வேறு)

இத்தகைய தொண்டர்கள் இருக்கின்ற நம்நாட்டில்
வித்தகனாய் வந்ததொண்டன் வேடர்குலத் தலைவன்குகன்
சொத்துகளாய் நாவாய்கள் சொந்தமென ஊர்மக்கள் 
எத்தனையோ வாய்த்திருந்தும் எக்காளம் அற்றகுகன்

கருங்குடுமி மண்தோய காகுத்தனை வணங்கி
பெருந்தோள்கள் உள்குறுக பேசாமல் வாய்பொத்தி
அருந்தொண்டன் என்பதற்கோர் அடையாளம் ஆகிநின்றான்
விருந்தென்று ராமனுக்கு விரால்மீன்தேன் கொண்டுதந்தான்

வாள்துறந்தான் வில்துறந்தான் வலிமைமிக்க பெருமலையாம் 
தோள்துறந்தான் உடல்குறுகி தோன்றுகிறான் உடன்குழுமும் 
ஆள்துறந்தான் தனித்தவனாய் அண்ணலவர் குடில்நாடி
நாள்துறந்து வாழ்ந்திடவும் நல்லாசை கொண்டுவந்தான்!

(வேறு)

பார்த்ததனால் தொண்டுசெய்வோர் பலபேர் உண்டு
பக்தியினாற் தொண்டுசெய்வோர் பலபேர் உண்டு 
ஈர்த்ததனால் தொண்டுசெய்வோர் பலபேர் உண்டு’
இருப்பெண்ணித் தொண்டுசெய்வோர் பலபேர் உண்டு
பார்க்காத ஓராளைக் கேள்விப் பட்டே 
பக்திவைத்த தலைவனை நான் அடிமை என்றே
சேர்த்தாளக் கேட்கின்ற குகனே தொண்டன்
செலவுகணக்(கு) ஒருகோடி மொழியாத் தொண்டன் 

(வேறு)

கங்கையை ராமன் கடந்திட உதவும் 
கடமையை குகன் பெற்றான் 
காலையில் படகும் கவலையுமாக 
கதிரவன் போல் வந்தான்
அங்ஙணம் அப்போ தருந்திறல் பரதன்
ஆரணம் புகுகின்றான்
ஆணையும் சூழும் சேணையும் கண்டான்
ஆத்திரம் குகன் கொண்டான்! 

யாரடா என்றன் தலைவனின் முன்னே
யாரடா யார் என்றே
எதிர்த்திடும் தொண்டன் நிலையினில் நின்றான்
அகத்தினில் கொதிக்கின்றான்
போரடா ஆ!ஆ! எனக்குதிக் கின்றான்
பொங்கியே சினக்கின்றான்
போந்தவன் பரதன் எனத்தெரிந் தவனைப் 
போயிவன் பார்க்கின்றான்!

(வேறு)

மறுபடியும் முன்னோக்கி நான்சென்று விட்டேன்
மற்றதை உரைக்காமல் இங்கேநிற் கின்றேன்
செறுகளமா பெருந்துதியா குகனென்ன செய்தான் 
செந்தமிழில் அடுத்தகவி உங்கட்குச் சொல்வார்

நறுமணமா கங்கைதனை ராமன்க டந்தான்
நாயடியேன் என்றவனைத் தம்பியெனச் சொன்னான் 
பெறற்கரிய நிலைதந்தான் உடன்பிறப்பே என்றான்
பெரும்பதவி அஃதன்றோ தலைவர்களின் பண்பு!

நாலுதம்பி நாங்களினி உன்னுடனே ஐந்து
நல்லசீதை உனக்கண்ணி கங்கையிலே முந்து
வேலையுண்டு சித்திரகூடத்தின் வழியைச் சொல்லு
வேடாநின் மக்களுடன் நீயொன்றி நில்லு!

காலம்நமை இணைக்குமென குகனுக்குப் பாடம் 
காகுத்தன் காட்டிவிடத் தனியான(து) ஓடம்
சாலுமென தலைவன்சொல் தட்டாமல் ஏற்றான்
சந்தர்ப்பத் தொண்டர்குழாம் மத்தியிலே வேற்றான்!

வாக்களித்த நேர்மைசொலும் கங்கைவழிப் பயணம்
வாழ்க்கைநிலை யாமைசொலும் கங்கைவழிப் பயணம்
ஏக்கமக்கள் அன்புசொலும் கங்கைவழிப் பயணம்
ஏற்றநெறி உயர்வுசொலும் கங்கைவழிப் பயணம்

தலைவருக்கு நெறிகள்சொலும் கங்கைவழிப் பயணம்
தர்மத்தின் பாதைசொலும் கங்கைவழிப் பயணம்
வலிமிகுந்த கதைகள்சொலும் கங்கைவழிப் பயணம்
வழிமாற்றும் கதைத்திருப்பம் கங்கைவழிப் பயணம்

தம்பியரின் தன்மைசொலும் கங்கைவழிப் பயணம்
தொண்டரவர் பெருமைசொலும் கங்கைவழிப் பயணம்
கம்பன்புகழ்க் கவிதைசொலும் கங்கைவழிப் பயணம் 
கற்றுவழி நடந்திடவே ஸ்ரீராம அயணம்!!

விவேக்பாரதி
15 ஜூலை 2022

Comments

Popular Posts