துயரங்கள் விற்பனைக்கல்ல - பாலு | #நூல்நோக்கம்


பாலு
வும் பிரியமுமாய் நிறைந்து, 140 பக்கங்களில் 14 கதைகளைத் தாங்கிய ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. உள்ளிருக்கும் ஒவ்வொரு கதையுடனும் கூடுமான அளவு சஞ்சரித்து, சிலாகித்துக் கதைக்குக் கதை தேவைப்பட்ட அவகாசங்களை எடுத்துக் கொண்டு தொகுப்பை நிறைவு செய்தேன். என் தனிமைகளில் துணை செய்தது இந்தப் புத்தகம். 

புத்தகம் வெளியாவதற்கு முன்பே, இதிலுள்ள கதைகளைப் பற்றி பாலு பேஸ்புக்கில் வெளியிட்ட அறிமுக உரைகள், கதைகளைப் படித்தாக வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அந்த ஆர்வக் கனலுக்கு ஏற்ற சரியான சுள்ளிகளைச் சுமந்துகொண்டுதான் கதைகளும் வந்திருக்கின்றன. அறிமுகங்களைப் படித்துவிட்டு, உறவாடக் காத்திருந்த இந்த வாசகனைக் கதைகள் ஏமாற்றவில்லை. 

பாலுவின் எழுத்துகளை ஆரம்பத்தில் இருந்து கவனித்துவரும் நண்பன் என்ற முறையில், அவை இப்போது புனைந்து கொண்டிருக்கும் அழகியலும், முதிர்ச்சியும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இதோ நான் ரசித்து வாசித்த சில பற்றிய துளிகள்-  

உயிர்த்தெழுதல் - நீண்ட நெடுங்கதையாக விரிந்த உயிர்த்தெழுதலின் கதைகளுக்குள் பெரும்பாலும் அனைவரும் தங்களைப் பொறுத்திக் கொள்ள முடியும். இந்துஜாவை வாழ்வில் பலர் கடந்து வந்திருக்கலாம். மதுபான விடுதியில், தான் செய்யாத தவறுக்காக தண்டனை பெறும் மாளவிகா 80களில் வரும் கதாநாயகியின் உருவத்தில் காட்சியளிக்கிறார். ஒரு நேர்க்கோட்டில் பயணித்த இரு துருவங்களை இணைத்த காரணத்தால், அந்த எழுத்தாளரும் சஜகமாகிவிட்டார். மொத்தத்தில் கதை தன் காரணத்தை உறுதி செய்து உயிர்த்திருக்கிறது. கதைக்குள் பள்ளிப் பொழுதுகளை விவரிக்கும் சில இடங்களின் விரசல் எனக்கு இடறல். அதை விரும்பும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. 

D மைனரும் C மேஜரும் - கச்சிதமான 2k கிட்ஸின் காதலாக நான் அதனை எடைபோடுவேன். கதையின் இடையில் வரும் கவிதைகள், பாலுவின் தனித்துவ முத்தங்கள். எப்போதோ எழுதிய கவிதையை எதேச்சையாக அனுப்பி, காதலை சம்பாதித்த கற்பனை அபாரமாகவும் அழகாகவும் (ஆசையாகவும்) இருப்பதைத் தவிர்க்க முடியாது. “காதல் பிச்சையும் காணிக்கை என்ற பெயரில் பெறப்படுகிறது” என்ற கவிதை வரி, ஒரு மின்னல். 

நிலவொளி சொனாட்டா - என் வாழ்வில் நான் சந்தித்த இரு வித்யாசமான பெண் ஆளுமைகளின் நினைவுகளை ஏவாளும், அனுராதாவும் கிளறிவிட்டார்கள். முந்தையை கதையை 2K கிட்ஸின் காதல் என்றால், இந்தக் கதையை விளிம்பில் விழுந்த 90ஸ் கிட்ஸின் காதல் எனலாம். கதைக்குள் பிரேக் அப் செக்ஸ் என்ற புதிய சமாசாரத்தைச் சொல்லும் இடத்தில், அதன் உளவியல் புரிதல்களையும் முழுமையான சொன்னது, நன்றிக்கும் மரியாதைக்கும் உரியது. 

உடுத்துவது ஒன்றே - கதையின் தலைப்பு இப்படி இருந்திருக்கலாம். இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை. இது போன்றதொரு மேகலாவை, நாகரிகம் கருதி தள்ளி நின்று ரசித்த நினைவு  உள்ளதால் சட்டென மிகவும் நெருக்கமாகிக் கொண்டது. எந்த அளவிற்கு? தெருவில் சிகப்புச் சுடிதார் தரிசனங்கள் எல்லாம், இவளும் மேகலாவோ என்று எண்ணம் தோன்றி, இக்கதையை அசைபோடச்செய்கிறது. 

உறவுகள் தொடர்கதை - தேவா மீது பரிதாபமும், நீலிமா மீது நேசமும், ராகவி மீது மரியாதையையும் உருவாக்கிய முக்கோன முடிச்சு. அதனை மிக நேர்த்தியாகவும், ரசனை மிகுந்த வழியிலும் பதிவு செய்திருப்பது, இந்தத் தொகுப்பின் நட்சத்திர கதை அந்தஸ்தை இதற்கு வழங்க வைக்கிறது. கதை நிறைவடையும்போது வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகள், படிக்கும் அனைவரையும் 4 பக்கங்கள் முன்னோக்கி நகர்த்தி, கதையின் தலைப்போடு நிறைவு செய்ய வைப்பதால் - கதை ஹிட்! 

அன்பின் பாலே - மருத நிலத்தின் காட்சி ஒன்றை, மிளைகாந்தன் குறுந்தொகையில் விளக்கியதற்குத் தகுந்த Homage ஐ செலுத்திவிட்டு முடிந்துள்ள கதை எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றே. முன்னரே இதைப் படித்திருந்தாலும், அதிலிருந்து துளியும் மாறுபடாமல் அதே இன்பத்தை மீண்டும் வழங்கியது. இதுவும் துணிச்சலான கதை என்பதும், அது மிக நேர்த்தியான கதையாடலால் சிறப்புற்றிருக்கிறது என்பதும் மறுத்தற்கரிது. 

விமர்சகன் - பிரதீப், இன்றைய இணைய வெளியில் எழுத்தால் பிரபலம் அடைந்திருக்கும் பல இளன் ஆண் எழுத்தாளர்கள்/விமர்சகர்களின் முகமாக காட்சியளிக்கிறான். அவனது எழுத்து ஆர்வமும், மதுமிதா மீது கொண்ட அக்கறையும், தன் வேலை மீது காட்டிய பொறுப்புணர்வும் ரசிக்க வைத்தன. படம் திரையாடலில் “அவள் ஒரு பூனை” என்று எழுதப்பட்டிருப்பதன் விளக்கத்தை அறிய விரும்புகிறேன். கதையின் நிறைவுப் பத்திகள், அதைக் கவிதையின் உச்சத்திற்குக் கொண்டு சென்று உணர்வூட்டின. 

மொத்தத்தில் #இன்பங்கள்விற்பனைக்கு

சபாஷ் பாலு!

 
விவேக்பாரதி
19-02-2022


Comments

Popular Posts