காதல் என்பது யாதெனக் கேட்கின்...


உள்ளத்துப் பறவைகள் கூடுகட்டும் 
    உணர்வென்னும் பெருவானம்! கண்களாலே 
கள்ளைத்தான் இருநெஞ்சம் மாற்றி மாற்றிக் 
    கலந்துண்ணும் வைபோகம்! வெற்றிடத்துப் 
பள்ளத்தில் அன்பென்னும் நீரைப் பாய்ச்சிப் 
    பயிர்செய்யும் விவசாயம்! ஆசை என்னும் 
வெள்ளத்தில் சிக்குண்டும் நீந்தக் கற்கும்
    வெள்ளந்தித் தனமிந்தக் காதல் ஆகும்! 

மேலழகு பார்க்குமொரு காதல் உண்டு 
    மென்மனத்தின் அழகுக்கும் சேர்வதுண்டு 
பாலழகை எண்ணாமல் காதல் உண்டு 
    பழகியதால் நட்பாகிக் கனிவதுண்டு
காலத்தில் யார்கைகள் எங்கே சேரும் 
    கணக்கின்றி விளையாடும் தாயக்கட்டை! 
மூலத்தில் விதைக்குள்ளில் விழுந்த தண்ணீர் 
    முளைக்கின்ற கணவியப்பு காதல் ஆகும்! 

காதல்களை எழுதிடலாம், இசையில் கோத்துக்
    கானமென இசைத்திடலாம், பிரம்மாண்டங்கள்
பாதைகளில் செய்திடலாம், மௌனம் கூட்டிப்
    பத்திரமாய்க் காத்திடலாம், செல்ல ஊடல் 
மோதல்கள் வந்திடலாம், முடியும் நேரம் 
    முத்தத்தின் சுவைபெறலாம், கடவுள் போல
பேதங்கள் இல்லாமல் அனைத்தும் ஏற்கும் 
    பெரியமதம், புதியநிலை காதல் ஆகும்! 

மனதுக்கும் மூளைக்கும் தினம் நடக்கும் 
    மல்யுத்தம் நமையென்றும் இயங்க வைக்கும்!
கனவுக்கும் நினைவுக்கும் தினம் நடக்கும் 
    களையான மயக்கங்கள் சிலிக்க வைக்கும்! 
புணர்வுக்கும் உணர்வுக்கும் இடையில் ஓடும் 
    பூமத்ய ரேகையிந்தக் காதல், மண்ணில்
வணக்கத்துக்(கு) உரித்தாகும் நேசம் தன்னை 
    வாழ்விக்கும் காதல்கள் வாழ்க வாழ்க!!  

விவேக்பாரதி
14-02-2022

Comments

Post a Comment

Popular Posts