தமிழில் பேசுற வேகத்துல டைப் பண்ணலாம்




நம் எண்ணங்கள் எப்படியெல்லாமோ சிறகடித்துப் பறக்கின்றன. மனது, சொற்களைச் சிந்திக்கும் வேகத்தில் எழுதக்கூடிய கைகள் இருந்தால், ஓர் எழுத்தாளனுக்கு எவ்வளவு சிறந்த வரமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் நினைப்பதுவே. இதனைச் சாதனை செய்யும் வகையில், நாம் வாயாரப் பேசும் சொற்களை எழுத்துகளாகத் தட்டச்சு செய்யும் மென்பொருள்களைப் பலரும் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த மென்பொருள், தமிழ் போன்ற இந்தியாவின் வட்டார மொழிகளுக்கும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

ஐ.ஓ.எஸ், கூகுள் வாய்ஸ் டு டைப் தொடங்கி பல செயலிகள் இதில் முன்னோடிகளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்போதிலும், தமிழில் நாம் பேசும் தொணியைச் சரியான வேகத்தில் கணித்துப் பிழையின்றி எழுதுவது என்பது குறைவாகத்தான் இருந்துவந்தது. இந்நிலையில், ’ஸ்பீச் நோட்ஸ்’ என்று புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வலைதளத்தில், தமிழில் ஒவ்வொரு வார்த்தைகளையும் நுணுக்கமாகக் கேட்டறிந்து, அதுவரையில் பிழையில்லாமல் தட்டச்சு செய்வதைக் கண்டோம்.

தமிழில், வேகமாகப் பேசினாலும் மெதுவாகப் பேசினாலும், துல்லியமாகக் கவனித்து, அவற்றைப் பெரும்பாலும் பிழையின்றி எழுதி நமக்கு தட்டச்சு செய்த கட்டுரையை விரைவில் கொடுக்கிறது இந்த ஸ்பீச்நோட்ஸ் என்னும் வலைதளம்.

இது ஆண்ட்ராய்டில் செயலியாகவும், குரோம் ப்ரௌசரில் எக்ஸ்டென்ஷன் ஆகவும் கிடைக்கிறது. இதன் துல்லியத்தைக் கணக்கிட, வேகமான நடையில் பாரதியார் கவிதைகளை வாசித்தபோதும், மிகவும் மெதுவான நடையில், இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இக்கட்டுரையைப் பேசியபோதும் இது பெரும்பாலும் பிழையின்றி வேகமாக தட்டச்சு செய்து கொடுத்தது ஆச்சரியம்.

தமிழுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இது என்பது ஆங்கிலத்தில் பேசும்போது நிகழும் சிறுசிறு பிழைகள் கூட தமிழில் வருவதில்லை என்பதிலிருந்து தெளிவாக புரிகிறது.

முதுமை, வேகமாக தட்டச்சு செய்ய முடியாத நிலை, தமிழில் தட்டச்சு செய்யும் வசதியின்மை என்னும் காரணங்களால் சிற்சில பின்னடைவுகளைச் சந்திக்கும் தமிழ் நெட்டிசன்கள் இந்த செயலி மூலம் மனதில் இருப்பதை மனதில் இருந்து வெளிவரும் வேகத்திலேயே தட்டச்சு செய்து கொள்ளலாம்.

இதனைப் போன்ற பல செயலிகள் இதற்கு முன்பிருந்தேகூட ஒருவரது பேச்சைத் தட்டச்சு செய்வதில் ஓரளவுக்கு பங்கை அளித்திருந்தாலும், இந்த மென்பொருள் இன்னும் மெருகேறிய தொழில்நுட்பத்துடன் விளங்குவது இணையத் தமிழுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்.

அமைதியான சூழல், பேச்சுக்கு இடையூறு வராத இடம், தெளிவான உச்சரிப்பு, நல்ல குரல் என்று எதையும் எதிர்பார்க்காமல் அலுவலகத்தில் எத்தனை சத்தங்கள் இருந்தாலும், அதற்கு ஊடாக சரியாக நம் ஒலிவாங்கியின் ஒலியைக் கவனித்து அற்புதமாக இது செயல்படுகிறது.

சிறுகதை, கவிதை, உரைநடை, சின்னச் சின்ன வாக்கியங்கள் என்று எதுவாக இருந்தாலும் மற்றவர்க்கு சொல்லும் பேச்சு வேகத்திலேயே இனி தட்டச்சு செய்துவிடலாம். இந்த செயலியை உருவாக்கியிருக்கும் ஸ்பீச் நோட்ஸ் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

இணையத்தில் அதிவேகமாகத் தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பது முக்கியமாகிறது.

- விவேக்பாரதி 
13.04.2020

Comments

Popular Posts