கவிதைப் பிறவி




இதை உதடுகள் சொல்லிக்கொண்டே இன்றைய நாளை விடுவித்தது!

காலம் தாண்டும் சொற்களையே - என்
   கவிதை சுமந்து வருகிறது!
கண்கள் மூடிய மறுகணமே - எனைக்
   கற்பனைக்குள் போய் விடுகிறது!
காலை மாலை இரவெல்லாம் - அதன்
   கணக்கில் தூள்தூள் படுகிறது!
காமம் தணியும் சுகம்போலே - ஒரு
   கவிதை முடிந்து விழுகிறது!

என்றும் இல்லாத் தனிமையிலும் - என்
   எண்ணம் தனிமைப் படவில்லை
ஏதோ ஏதோ சொற்சந்தை - ஒலி
   எல்லாத் திசையும் கேட்கிறது!
ஒன்றும் செய்யா துறங்கிடலாம் - என
   உள்ளம் நினைத்தால் அதுகூட
ஒத்துழைக் காமல் இரவுகளே - அறை
   உள்ளே நீண்டு விடிகிறது!

முணுமுணுப் பெல்லாம் பாட்டாக - சொல்
   முத்துகள் சிந்தும் வேட்டாக
முயற்சிக் காமல் தொடர்கிறது - மென்
   மூர்க்கம் அன்பும் சுடர்கிறது!
கணங்கள் எல்லாம் நின்றபடி - நான்
   காற்றின் அலைகளைக் கண்டபடி
காகிதம் போலே கிடக்கின்றேன்! - ஒவ்வோர்
   கவிதைக்கும் நான் பிறக்கின்றேன்!!

-விவேக்பாரதி
24.03.2020

Comments

Popular Posts