வாழ்வே மாயம் | முற்று முடுகு வெண்பா

முற்று முடுகு வெண்பா ஒன்றை #முயன்று_பார்க்கலாம் என்று பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் எழுதியது. 


மாயமான தேகமீது மோகமாகி நாளு(ம்)நாளு(ம்)
மாயமான காமமேற மாசுலாவி - மாயமான
வாழ்விலேவி காரமாகி வீழும்நேர மாகும்போது 
மேவுவீர்சி வாயநாம மே!

மாயமான வாழ்க்கையில், இந்த உடலே ஒரு மாயம்தான். அதன்மேல் மோகத்தைக் கொண்டு, அதை நாளும் வளர்க்க முற்பட்டு, அந்த உடலிலும் சிலநேரம் தங்கிச் செல்லும் மாயமான காமத்தின் மீது மனதைச் செலுத்தி, அதனால் இல்லாத குற்றங்களை எல்லாம் நம்மோடு சுமந்து கொண்டு, இறுதியில் வாழ்க்கையில் விகாரமாகி நாம் வீழ்கின்ற நேரம் வரும். அப்படி வரும்போதேனும் சிவாயநம என்னும் நாமத்தை மேவுவோமாக. 

இதிலே மாயம் என்ற சொல்லை நாம் உற்று நோக்க வேண்டும். மாயம் என்பதைக் கண்ணுக்குத் தெரியாதது என்றும், சில நேரங்கள் மட்டுமே தங்கிச் செல்வது என்றும், நம்மை மயக்க வல்லது என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறு பொருள் கொண்டால், இந்த வாழ்க்கையே ஒரு மாயம். அதில் இந்த தேகம் என்பது சிலகாலம் மட்டுமே நம்முடன் இருக்கப் போவது. குழந்தையில் இருந்த தேகம் இப்போது நமக்கு இல்லை. இளமையில் இருக்கும் தேகம் முதுமையில் கூட வரப்போவதில்லை. எனவே இந்த தேகம் மாயைக்குள் மாயை. அதிலும் காமம், தேகத்தில் சில நேரம் மட்டுமே தங்கும் ஓர் உணர்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தோமானால், காமம் ஒரு மனித உடலில் இருபது நிமிடங்கள் கூட முழுதாய்த் தாக்குப் பிடிக்க முடியாத ஓர் உணர்வு என்கிறது ஆய்வு. ஆனால், நம் பயணம் இந்த உடலை வளர்ப்பதிலும், அதன் அலங்காரங்களிலும், குறிப்பாக காமத்தின் சிந்தனையிலும் கழிந்து விடுகிறது. இத்தனையையும் குறிக்கவே இங்கு மாயம் மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

மேலும், இறைவனின் நாமம் என்பதும் வெறுமனே இறைவன் நாமத்தை மட்டுமே ஜெபித்துக் கொண்டிருப்பதல்ல. இறைவனின் நாமத்தை நாம் சொல்லும்போது அது சம்பந்தமான எண்ணங்கள் நமக்குள் உருவாகுகின்றன. இறைவன் குறித்த இறையருளாளர்களின் கருத்துகளை நாம் தேடிப் படிக்கிறோம். அதில் நல்லொழுக்கமும், தீயன தீண்டாமையும் நமக்குப் போதிக்கப் படுகின்றன. அவற்றை நாம் கேட்கக் கேட்க நம்மை அறியாமலேயே நாம் அவற்றைத் தற்செயலாகப் பின்பற்றத் தொடங்குகிறோம். தேகம், மோகம், வாழ்க்கை போன்ற நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வைப்பதை நீக்கி, நிலையான தத்துவத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டு நாம் நடக்க ஆரம்பித்தால் நம் பயணத்தின் இலக்கு வெகு சீக்கிரம் நம் கண்களுக்குத் தெரியும். 

-விவேக்பாரதி
06.03.2020

Comments

  1. ம்.ம். மாயத்திற்கு மயக்கும் விளக்கம்.
    உன் பாட்டை விட விளக்கம் நல்லாருக்கப்பா. (திருவிளையாடல் விறகு வெட்டி உரையாடல்)😝

    ReplyDelete

Post a Comment

Popular Posts