அமைதிச் சத்தம்


காலையிலே இனம்புரியா அமைதி! அந்தக் காரணமாய் உதிக்கின்றது இந்தப் பாட்டு! பேரமைதி என்றிதையா சொல்லு கின்றாய் பெரும்யுத்தம் நிகழ்வதற்கே இதுமுன் னோட்டம் காரணமே இல்லாத புயலாம் இந்தக் கவிதைவரும் முன்னாலே சிரிக்கும் வானம்! ஓரணியாய் வார்த்தைகளும் ஓய்வே இல்லா ஒய்யாரக் கற்பனையும் ஒன்றாய்க் கூடி நேரெதிராய்ப் போர்புரியும் முன்னே கொஞ்சம் நெஞ்சக்க ளத்திடையே அமைதிச் சத்தம்! எண்ணங்கள் என்கின்ற கல் படாத எந்தவொரு சலனமுமே தீண்டி டாத தண்ணீரின் ஞானநிலை கனவுத் தேவன் சந்நிதியில் சொல்லின்றி கிடக்கும் கோலம்! வண்ணநடம் காண்கின்ற குழந்தை போலும் வடிவழகைக் காண்கின்ற நெஞ்சம் போலும் கண்களிலே ஓரத்தில் கண்ணீர்த் தேக்கம் கழல்கின்ற முத்திரைகள் படைக்கும் காலை! ஓடத்தே ஒருபயணம் போகும் போதும் உயரத்தே ஒருமலையில் ஏறும் போதும் காடென்னும் காவியத்துள் நுழையும் போதும் கண்மூடி மனம்மூடித் தூங்கும் போதும் பாடலென நெஞ்சுக்குள் சத்தம் இல்லாப் பகற்பொழுதில் மரத்தடியில் சாயும் போதும் வேடத்தைக் கலைக்கின்ற குணத்தின் வண்ணம் வெளித்தோன்றா சிறுஞானம் இந்தச் சத்தம் இதனைப்போய் அமைதியென நினைத்துக் கொண்டு இதைக்கலைக்க முணுமுணுக்கும் எண்ணம் வேண்டா கதவுக்கு வெளியினிலே காத்தி ருக்கும் கணம்கூட ஒருசுகம்தான் அது திறக்கும் அதுவரைக்கும் அமைதியெனும் குளத்து நீரில் ஆடிக்கொண் டிருமனமே இதுதான் வேளை கதவுகளே திறந்துகொண்டால் அதன்பின் இந்தக் காற்றுகூட உன்பாட்டுச் சுருதி யாகும்!! -விவேக்பாரதி 03.01.2020

Comments

  1. அமைதிக்கவிதை ஆர்ப்பரிக்கிறது. மிகவும் நன்று பாரதி.
    நாகசுந்தரம்

    ReplyDelete

Post a Comment

Popular Posts