பாரதியார் திருநாள்






 பாரதி யார்திரு நாளினைத்தான் இந்தப்
    பாருக்குள் எப்படிப் போற்றிகிறார்?
காரணம் என்னென்ன சாற்றுகிறார்? எனக்
    கண்டுகொள்வோம் சற்று வாருங்களேன்!



எங்கள் மகாகவி வந்துவிட் டானென்
    றெழுத்துலகம் மிக ஆர்ப்பரிக்கும்
சிங்கக் குரலொன்று வந்தததென்றே யிசைச்
    சிந்தனையர் மிகத் துள்ளிநின்றார்!
எங்கள் இனத்தவன் வந்துவிட் டானெமை
    ஏற்றிவைப்பான் மிகப் போற்றிவைப்பான்
கங்கு விழியினில் காதலுளான் எனக்
    காக்கை குருவிகள் பாடினவே!

ஞானக் களஞ்சியம் வந்துவிட்டான் இனி
    நன்மைவரும் மன வன்மைவரும்
ஈனப் புலைத்தொழில் ஏகிவிடும் என
    இங்குள யோகிகள் கோஷமிட்டார்
ஆன வரைக்கும் அடிமைப்பட்டோம் இன்னும்
    அச்சமில்லை ஒன்றும் மிச்சமில்லை
சேனைப் படையொன்று வந்ததென்றே குலச்
    சேர்ப்பிழந்தோரெலாம் ஆர்த்தெழுந்தார்!

தென்னை மரங்கள் சிலுப்பினவே, தம்மைத்
    தேடி யிசைப்பவன் வந்ததனால்!
முன்னை உயர்நெறி வேதங்கள்தாம் ஒளிர்
    முத்தெனத் தோன்றி ஜொலித்தனவே
மன்னும் அமுத மலர்தொடுத்தே எனை
    மாலை மழையில் நனைப்பனென்றே
அன்னை தமிழ்மிக ஆடிவந்தாள், நல்ல
    ஆனந்தத் தாலாட்டு பாடிவந்தாள்!

பாருக்குள் மட்டுமா இந்தக்கதை, உயர்
    பார்வதி தேவி குதித்ததெலாம்
யாருமக் கிங்கு சொலமுடியும்! வாணி
    யாழெடுத்தாள் நல்ல பண்தொடுத்தாள்!
ஊருக்குள் மாமழை பூமழையாய் அந்த
    உன்னதத் தேவர் பொழிந்திருந்தார்!
நீருக்குள்ளே பல மீன்களெல்லாம் தங்கள்
    நினைவை மறந்தங்குத் துள்ளினவே!

கண்ணன் உலகில் பிறந்ததுபோல் நம்
    கவிதையின் மன்னன் பிறந்ததனால்
வண்ணங்கள் வண்ணங்கள் வண்ணங்களாய் அருள்
    வாசனைகள் எங்கும் ஓங்கியதே!
பண்ணமைத்தான் கொஞ்சும் பாட்டமைத்தான் கனல்
    பறக்கும் கருத்துகள் செய்துவைத்தான்
மண்ணுக்குள்ளே அவன் விண்படைத்தான் என
    மந்திரம் வானின்று வாழ்த்தியதே!!

-விவேக்பாரதி
11.12.2018

Comments

Popular Posts